Saturday, August 21, 2010

நோன்பு திறந்தவுடன் ஒருவர் ஓத வேண்டிய பிரார்த்தனை

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

‘தஹபல் லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’

பொருள்: நரம்புகள் நனைந்து விட்டன, தாகம் தீர்ந்து விட்டது, கூலி அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உறுதியாகி விட்டது’ (அபூதாவுத்)

மனிதனை ஆச்சரியப்படுத்தும் இந்த விஷயங்களில் அல்லாஹ்வின் நாட்டம்

அவர்களுடைய செல்வங்களும் அவர்களுடைய மக்கள் (பெருக்கமும்) உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம், அல்லாஹ் அவற்றைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையிலேயே அவர்களை வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கிற நிலையில் அவர்களுடைய உயிர்கள் பிரிவதையும் நாடுகிறான். (அத்தவ்பா-55)

Monday, August 9, 2010

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)

9-8-2010 Monday


ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் :

யா அல்லாஹ்..!(உனது) சுவனச் சோலைகளில் உள்ள சல்சபீல் என்னும் நீரூற்றிலிருந்து இனிமையான, குளுமையான தண்ணீரை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்குப் புகட்டுவாயாக!


நெடிதுயர்ந்த உடலும், நல்ல உடலமைப்பும், சிவந்த கன்னங்களும், சுருள் முடிகளையும், பிரகாசமான முகத்தோற்றத்தையும், இன்னும் வலிமையான உடலமைப்பையும் கொண்டவர் தான் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள். மிகச் சிறந்த வியாபாரியும், இன்னும் மத விவகாரங்களில் மிகச் சிறந்த ஞானத்தையும், உண்மையையும், நேர்மையையும் பண்பாகப் பெற்றவர். கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் சொர்க்கத்திற்கு நன்மாரயங் கூறப்பட்ட பத்து நபித்தோழர் பெருமக்களில் இவரும் ஒருவராவார்.

தமத்துல் ஜந்தல் என்னும் போருக்கு தளபதியாக இறைத்தூதர் (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்டு, இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களால் தலைமைப் பொறுப்பை பறைசாட்டக் கூடியதற்கான தலைப்பாகையை அணிவிக்கப்பட்டவரும் ஆவார்கள். அபூபக்கர் (ரழி) அவர்களிடமிருந்து வந்த சத்திய அழைப்பை ஏற்று, தனது 30 வது வயதில் இஸ்லாத்தினை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இருமுறை ஹிஜ்ரத் செய்த - அதாவது ஒருமுறை அபீசீனியாவிற்கும் இன்னொரு முறை மதீனாவிற்கும் ஹிஜ்ரத் செய்து சென்ற நற்பேற்றுக்கும் உரியவராவார்.

இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளுமுன் அப்து அம்ர் என்ற பெயருடன் இருந்தவரை, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் என மாற்றினார்கள். அதன் பிறகு மக்கள் இவரை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் என்றே அழைக்கலானார்கள். சிறந்த புத்திகூர்மையையும் நல்ல பழக்க வழக்கங்கள் மற்றும் பண்பாட்டிற்குச் சொந்தக்காரரான அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள், இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளுமுன்பிலிருந்தே மதுபானம் அருந்துவதை வெறுத்தொதுக்கிய நற்குணத்திற்குச் சொந்தக்காரராவார்.

      அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற பொழுது அவர்கள் வெறுங்கையுடன் தான் சென்றார்கள். எந்தவித பொருளாதாரமும் அவர்களிடம் இல்லை. இந்த நிலையில், சஅத் பின் ரபீஈ அன்ஸாரீ (ரழி) என்ற நபித் தோழருடன் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களை சகோதரராக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இணைத்து வைத்தார்கள். அவரை வரவேற்றுக் கண்ணியப்படுத்திய சஅத் (ரழி) அவர்கள் கூறினார்கள் :

சகோதரரே..!

இறைவன் என்மீது அளவற்ற அருட்கொடைகளைச் சொறிந்துள்ளான். இந்த மதீனாவிலேயே நான் தான் மிகப் பெரிய செல்வந்தனாகவும் இருக்கின்றேன். இப்பொழுது என்னிடம் இரண்டு மிகப் பெரிய தோட்டங்களும், இரண்டு மனைவிகளும் இருக்கின்றார்கள். இந்த இரண்டு தோட்டங்களில் எது உங்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கின்றதோ அதனையும், இரண்டு மனைவிகளில் உங்களுக்குப் பிடித்த மனைவி ஒருவரையும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கின்ற தோட்டத்தை உங்கள் பெயரிலும், நீங்கள் தேர்ந்தெடுக்கின்ற மனைவியை நான் விவாகாரத்தும் செய்து தருகின்றேன், அவளது இத்தா தவணை முடிந்ததும் நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்கள். நீங்கள் இப்பொழுது என்னுடைய இஸ்லாமிய சகோதரராக இருப்பதின் காரணமாக உங்களது வாழ்வில் நல்லனவற்றை நாடுவதும், ஒரு இஸ்லாமிய சகோதரன் என்ற முறையில் உங்களது தேவையை நிறைவேற்றி வைப்பதற்கு இஸ்லாம் நமக்குக் காட்டித்தந்திருக்கின்ற வழிமுறையும், சமூகக் கடமையுமாகும் என்று கூறினார்கள்.

இத்தகைய தியாகமிக்க வாழ்க்கைக்குச் சொந்தக் காரர்களை இஸ்லாமிய வரலாற்றில் அன்றி வேறு எங்கு காண முடியும்?!

ஆனால், கண்ணியமும், சுயமரியாதையும் கொண்ட அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் தனது சகோதரரின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன், அவர் கூறினார் :

அல்லாஹ் உங்களை ஆசீர்வதிப்பானாக! இன்னும் உங்களது உடமைகளிலும், உங்களது குடும்பத்தினர் மீதும், உங்களது குழந்தைகளின் மீது அருள்பாலிப்பானாக! உங்களது செல்வங்கள் உங்களிடமே இருக்கட்டும். முதலில் எனக்கு வணிகச் சந்தைக்கான வழியைக் காட்டுங்கள். எனது வாழ்வாதாரத்தை நானே தேடிக் கொள்கின்றேன். உங்களுக்கு ஒரு பாரமாக நான் இருக்க விரும்பவில்லை என்று கூறினார்கள்.

அதன் பின் வணிகச் சந்தைக்கான வழியை அறிந்து கொண்ட அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள், தனது வியாபாரத்தை அங்கு தொடங்கினார்கள். அவர் எப்பொழுது தனது சொந்த வியாபாரத்தைத் தொடங்கினாரோ அப்பொழுதிலிருந்து இறைவன் அவரது வியாபாரத்தின் மீது அருட்கொடைகளைச் சொறிய ஆரம்பித்தான்.

ஒருநாள் மாலை நேரத்தில் வாசனைத் திரவியங்கள் பூசப்பட்ட விலையுயர்ந்த ஆடைகளை அணிந்த நிலையில் வித்தியாசமான தோற்றத்தில் நின்று கொண்டிருந்த அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்களைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மானே..! உங்களது தோற்றத்தில் நான் ஒரு வித்தியாசத்தைக் காணுகின்றேனே..! என்று கூறினார்கள்.

மரியாதையோடும், அன்போடும் .. இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! நான் ஒரு அன்ஸாரிப் பெண்ணை மணம் புரிந்திருக்கின்றேன் என்று கூறினார்கள்.  நீங்கள் எவ்வளவு மணக்கொடை கொடுத்துத் திருமணம் புரிந்தீர்கள். ஒருகட்டித் தங்கத்தைக் கொடுத்துத் திருமணம் புரிந்திருக்கின்றேன் என்று கூறினார்கள்.

திருமண வலிமா விருந்து கொடுத்தாகி விட்டதா? இல்லையெனில், ஒரு ஆட்டையாவது அறுத்து விருந்து கொடுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்களின் வியாபாரத்தில் இறைவன் தனது பூரண அருட்கொடைகளை வழங்கியிருந்தான். அவர் கனவிலும் நினைத்திராத அளவுக்கு அவரது செல்வ வளங்கள் அதிகரித்துச் சென்றன. அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் ஒரு கல்லைத் தொட்டாலும் அது தங்கமாக மாறி விடும் என்று சொல்லுமளவுக்கு அவர் ஆரம்பித்த அத்தனை வியாபாரங்களிலும் இறைவன் தனது அருள் மழையைப் பொழிந்து கொண்டிருந்தான். வியாபாரத்தை அடுத்து, விவசாயத்திலும் அதிகக் கவனம் செலுத்தினார். மிகப் பரந்த அளவில் விவசாயத்தை ஆரம்பித்த அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்களுக்கு, கைபரில் ஒரு பெரிய நிலத்தையே இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்களுக்கு வழங்கினார்கள். ஜர்ராஃப் என்ற இடத்தில் இருந்த அவரது நிலத்திற்கு தண்ணீர் இறைப்பதற்காகவே, அவரிடம் 20 ஒட்டகங்கள் இருந்தன. இவ்வளவு சொத்துக்களையும் அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் தனது சம்பர்த்தியத்தின் மூலமாகவே ஈட்டிக் கொண்டார். மேலும், இத்தனை சொத்துக்களில் இருந்து வரக் கூடிய வருமானத்தை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக அவர் செலவிடுவதற்காக என்றுமே தயங்கியதில்லை, அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஒரு சமயம், 700 ஒட்டகங்கள் நிறைய வணிகப் பொருட்களுடனும், தானியங்களுடனும் மதீனமா நகரத்துக்குள் நுழைந்த பொழுது, அந்த வணிகக் கூட்டத்தின் வருகையால் மதீனா நகரமே அதிர்ந்து கொண்டிருந்தது. இந்த சலசலப்பை செவியுற்ற அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள், இந்த மதீனாவிற்கு என்ன நேர்ந்து விட்டது, ஒரே சலசலப்பாக இருக்கின்றதே..! என்று தனது பணிப் பெண்ணிடம் கேட்கின்றார்கள். அப்துர் ரஹ்மானின் 700 ஒட்டகங்கள் வணிகப் பொருட்களுடன் மதீனா நகருக்குள் நுழைந்து கொண்டிருப்பதாகவும், அதன் காரணமாகத் தான் இந்த சலசலப்புக்கள் என்று அவருக்குக் கூறப்பட்டது. இதனைக் கேட்ட அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் :

''அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் சுவனத்தில் நுழையும் பொழுது, தவழ்ந்த நிலையிலும், குதித்துக் குதித்தும் நுழைவார்கள்;'' என்று கூறினார்கள்.

இதனைக் கேள்விப்பட்ட அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள், அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் வந்து அன்னையவர்களிடம், நீங்கள் இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றீர்களா என்று கேட்டார்கள். அன்னையவர்களும் ஆம்..! எனச் சொன்னதும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருவதனங்களால் தனக்கு அறிவிக்கப்பட்ட இந்த நன்மாராயத்திற்காக, அல்லாஹ்வின் பெயரால் இந்த வணிகப் பொருட்களையும், அதனைச் சுமந்து வந்திருக்கின்ற இந்த ஒட்டகங்களையும் நான் இந்த முஸ்லிம் உம்மத்தின் நல்வாழ்வுக்காக தானமாகக் கொடுக்கின்றேன் என்று கூறி, அத்தனை பொருட்களையும் ஒட்டகங்களையும் தானம் செய்து விட்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட சமுதாயம் தீனுல் இஸ்லாத்தில் புடம் போடப்பட்ட தங்கங்களாக பரிணமிப்பதற்குப் பேருதவி செய்த அந்த வல்லோனாம் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் தனது ஆரம்ப நாள் முதல் இறுதி நாள் வரையும், கணக்கில்லாமல் தனது சொத்துக்களை தானம் வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் அவ்வாறு தானமாக வழங்கினாலும், அவரது சொத்தின் மதிப்பு நாளுக்கு நாள் வளர்ந்ததே ஒழிய குறைந்ததாகச் சரித்திரம் கிடையாது. அவரது சந்ததிக்காக மிகப் பெரும் சொத்தை விட்டுச் சென்றார். அவரது நான்கு மனைவிகளுக்கு மட்டும் எண்பதாயிரம் தினார்களையும், ஏராளமான தங்கக் கட்டிகளையும் விட்டுச் சென்றார். அவற்றை வெட்டி, அவரது சந்ததியினரிடையே பங்கு வைக்கப்பட்டது. அவர் இறந்த பொழுது, அசையாச் சொத்துக்களைத் தவிர்த்து, ஆயிரம் ஒட்டகங்களையும், நூறு குதிரைகளையும், மூவாயிரம் ஆடுகள் கொண்ட மந்தையையும் விட்டுச் சென்றார். இவ்வளவு செல்வ வளங்களையும் பார்த்து சந்தோஷப்படுவதை விட்டு விட்டு, எப்பொழுதும் மறுமை நினைவிலேயே, அதன் எதிர்பார்ப்பிலேயே கவலை தோய்ந்தவர்களாக இருப்பார்கள்.

ஒருமுறை அவர் நோன்பு திறப்பதற்காக வேண்டி அவருக்கு முன் தட்டில் உணவு வைக்கப்பட்டது. அவர் முன் வைக்கப்பட்ட உணவுத் தட்டுக்களைப் பார்த்தவுடன், அவரது கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக ஓட ஆரம்பித்தது.

முஸ்அப் பின் உமைர்..! நீங்கள் இவனை விடச் சிறந்தவர்கள்.. என்று தன்னைச் சுட்டிக் காட்டிக் கொண்ட அவர்கள்,

நீங்கள் இறந்த பொழுது உங்களது உடலை மூடுவதற்கு சரியான அளவில் ஆடை கிடைக்கவில்லை. கிடைத்த அந்த சிறிய ஆடையைக் கொண்டு தலையை மூடினால் கால் தெரிந்தது, காலை மூடினால் தலை தெரிந்தது. இந்த உலகம் அவருக்கு மிகப் பெரிய செல்வ வளத்தைக் கொண்டு அவரை மகிழ்விப்பதற்காக தயாராகத் தான் இருந்தது. அவருக்கு வழங்கிய இறைவனது அருட்கொடைகளைக் கொண்டு அவர் இறைவனைப் பயந்தார், அந்த அருட்கொடைகளில் தன்னை இழந்து விடாமல், இறைவனது மறுமையில் கிடைக்கக் கூடிய அளவில்லாத அருட்கொடைகளின் மீது ஆசை வைத்தார். இதனை அவர் நினைத்த மாத்திரத்திலேயே வெட்கம் மேலிட பயத்தால், அழுக ஆரம்பித்து விட்டார் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள். அதன் காரணமாக தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த உணவைக் கூட அவரது கரங்கள் தீண்டாமலேயே இருந்தது.

மறுமைக்காகத் தங்களது இவ்வுலக வாழ்க்கையைத் தியாகம் செய்த அந்த நல்லுலங்களின் சிறப்பான குணங்களுக்கு இவையே மிகச் சிறந்த சான்றுகளாகும். ஒருமுறை இவர் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருப்பதைப் பார்த்த ஒருவர், அப்துர் ரஹ்மானே..! உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது, ஏன் இப்படித் தேம்பித் தேம்பி அழுகின்றீர்கள்? உங்களது கண்களில் கண்ணீர் வழிகின்றன, இன்னும் நீங்கள் கவலை தோய்ந்தவர்களாக இருக்கின்றீர்களே? காரணமென்ன என்று வினவினார். அதற்கு அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள்,

           இந்த முஸ்லிம் உம்மத்தின் ஆட்சியாளராக இருந்து, இந்த உலக வாழ்க்கையிலிருந்து விடை பெற்றுச் சென்று விட்ட நம் தலைவர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தனது குடும்பத்திற்காக எதனையும் விட்டு விட்டுச் செல்லவில்லை. மிகவும் எளிமையான அளவில் கூட, இன்னும் அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான உணவைக் கூட அவர்கள் விட்டு விட்டுச் செல்லவில்லை. ஆனால் நாம் இப்பொழுது செல்வ வளத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நமது இறுதி முடிவு எவ்வாறு இருக்கும் என்று தெரியவில்லை. இந்த உலக வாழ்க்கையிலேயே அனைத்து அருட்கொடைகளையும் சுகிக்கும்படி நம்மை விட்டு விட்டு, மறுமையில் நம்மை அனாதரவாக விட்டு விடாமல் இருக்க இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றேன், என்று அவருக்கு பதில் கூறினார்கள்.

அவர்கள் இந்த உலக வாழ்க்கையும், மறுமையையும் நினைத்து வாழ்ந்த வாழ்க்கையை நாம் என்னவென்று சொல்வது..! எல்லாப் புகழும் இறைவனுக்கே!

தனது வியாபாரம் மற்றும் விவசாயப் பணிகளுக்கிடையேயும் அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் பல போர்களில் கலந்து கொண்டார்கள். இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக ஜிஹாதில் கலந்து கொண்டார்கள். ஒரு போரில் கலந்து கொண்ட அவர் இஸ்லாத்தின் பிரதான எதிரியாகத் திகழ்ந்த உமைர் பின் உஸ்மான் என்பவனை தீரத்துடன் துணிந்து அவனது தலையைக் கொய்து பெருமைபடைத்தார்கள்.

இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டு போரிட்டுக் கொண்டிருந்த பொழுது, இரு வீரச் சிறுவர்களான மஆத் மற்றும் மாஊத் ஆகிய இருவரும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களிடம் வந்து, அபு ஜஹ்ல் என்பவன் எங்கே, அவன் எந்த இடத்தில் இருக்கின்றான் என்பதை எங்களுக்குக் காட்டுங்கள் என்று கேட்டார்கள். அவனிடம் உங்களுக்கு என்ன வேலை? என்று அந்தச் சிறுவர்களிடம் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் வினவினார்கள். அவன் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அதிகத் தொல்லை கொடுப்பதாகக் கேள்விப்பட்டோம், அவனை எங்களது கரங்களால் கொன்று நிரந்தரமாக அந்த நரகத்தின் அடித்தளத்திற்கு அனுப்ப விரும்புகின்றோம் என்று அந்த வீரச் சிறுவர்கள் பதில் கூறினார்கள். அந்தச் சிறுவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அபூ ஜஹ்ல் மிகவும் கோபாவேசமாக இவர்களை நெருங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள், உங்களது இரை அதோ வந்து கொண்டிருக்கின்றது என்று அபூ ஜஹ்லை அந்தச் சிறுவர்களுக்கு அடையாளம் காட்டினார்கள். அவனை அடையாளம் காட்டியது தான் தாமதம், மின்னலெனப் பாய்ந்த அந்தச் சிறுவர்கள் தொடுத்த இடி போன்ற தாக்குதலால் நிலை குலைந்த அபூ ஜஹ்ல் தனது குதிரையிலிருந்து விழுந்து உயிரை விட்டான். அந்த சிறுவர்களது வீரத்தை என்னவென்று சொல்வது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது வைத்திருந்த அளவற்ற அந்தப் பாசம் தான் அவர்களது வீரத்திற்கு வித்திட்டது. அபூ ஜஹ்லை எதிர்க்கும் வலிமையைத் தந்தது. இந்த இளம் வயதில் இஸ்லாத்தின் கொடிய எதிரியை எதிர்க்கும் மன வலிமையைத் தந்ததே இஸ்லாத்தின் அளப்பரிய ஆற்றலின் உந்து சக்தியாகும்.

ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு தாமத்துல் ஜன்தல் என்ற இடத்தை முஸ்லிம்களின் நிலப்பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியாக ஆக்கிக் கொள்வதற்காக ஒரு படை அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் பனூ கலப் என்ற குலத்தவர்கள் வசித்து வந்தார்கள், இவர்கள் இஸ்லாத்திற்கு எதிரிகளாகச் செயல்பட்டார்கள். இந்தப் படைக்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களைத் தளபதியாக நியமித்து அனுப்பி வைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தலைவருக்கான தலைப்பாகையையும் அணிவித்து, அவரது கையில் இஸ்லாமியக் கொடியையும் கொடுத்து அனுப்பி வைக்கின்றார்கள்.

இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், அந்த மக்களை இஸ்லாத்தின் பால் அழையுங்கள். அது அவர்களுக்கு நல்லதாக இருக்கும். அவ்வாறு அவர்கள் இஸ்லாத்திற்குள் வரவில்லை என்றால், அவர்களை எதிர்த்துப் போர் புரியுங்கள். ஆனால் அங்குள்ள வயதானவர்களைத் தாக்க வேண்டாம், பெண்களையும் குழந்தைகளையும் தாக்க வேண்டாம் கவனமாக இருக்கவும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அறிவுரையைக் கேட்டுக் கொண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள், அந்த மக்களிடம் மூன்று நாட்கள் இருந்து மிகவும் அழகான முறையில் இஸ்லாத்தின் கருத்துக்களைத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்கள். இஸ்லாத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றார்கள். அந்தக் குலத்துத் தலைவனாக இருந்த அஸ்பக் பின் அம்ர் குல்பி, கிறிஸ்துவத்தை மிகவும் நேசித்துக் கொண்டிருந்த அவர், இஸ்லாத்தின் கொள்கையால் கவரப்பட்டார், பின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவர் இஸ்லாத்திற்குள் நுழைந்ததன் காரணமாக, அதனால் தாக்கமுற்ற அவரது குலத்தைச் சேர்ந்த பலர் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள். இன்னும் அவர்களில் எவர் இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளவில்லையோ, அவர்கள் இஸ்லாமிய அரசுக்கு ஜிஸ்யா என்ற பாதுகாப்பு வரி செலுத்த வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.

இன்னும் அந்த குலத் தலைவர் தனது மகளை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்குத் திருமணம் முடித்து வைத்தார். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களின் அமைதியான பிரச்சாரப் பணியின் மூலமாக போர் இல்லாது, எந்தவித உயிர் மற்றும் பொருட்சேதங்கள் இல்லாமல் அமைதியான முறையில் அந்தப் பகுதி மக்கள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள்.

இஸ்லாமிய அழைப்புப் பணி

இஸ்லாமிய அழைப்புப் பணிக்காக கணக்கு வழக்கின்றி, அளவில்லாமல் அள்ளிக் கொடுத்து சேவை புரிந்து வந்தார். செல்வத்தை இவ்வாறு தானம் செய்ததன் காரணமாக, இஸ்லாமிய வீரர்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. ஒருமுறை இஸ்லாமிய வீரர்கள் போரில் பயன்படுத்துவதற்காகவென்றே ஐநூறு குதிரைகளை வாங்கினார். இன்னுமொரு முறை முழுக்க முழுக்க அரபு இனத்தில் பிறந்த ஐம்பதாயிரம் குதிரைகளை இஸ்லாமிய வீரர்கள் பயன்படுத்துவதற்காகவென்று வாங்கினார்.

அவர் இறப்பதற்கு முன்பாக தன்னிடம் இருந்த அனைத்து அடிமைகளையும் விடுதலை செய்தார். இன்னும் பத்ரு யுத்தத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு வீரருக்கும் ஐநூறு திர்ஹம்களை பரிசாக வழங்கினார். இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களான, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு தனது சொத்திலிருந்து ஒரு பகுதியை வழங்குமாறு தனது உயிலில் எழுதி வைத்திருந்தார்கள்.


ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக அடிக்கடி பிரத்யேகமாகப் பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.

யா அல்லாஹ்..! அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்கு உனது சுவனத்தில் உள்ள சல்சபீல் என்னும் ஓடையில் ஓடும் தூய நீரைப் பருகச் செய்யும் பாக்கியத்தை வழங்குவாயாக!

இன்னும் இந்த பூமியிலே வாழ்ந்த எண்ணற்ற மக்களின் பிரார்த்தனைகளைப் பெற்றுக் கொள்ளும் நற்பேறு பெற்றவர்களாகவும் திகழ்ந்தார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தான் வாழ்ந்த காலத்திலேயே தனது ஆருயிர்த் தோழரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களுக்கு சுவனம் உண்டென்று நற்செய்தி வழங்கி விட்டுச் சென்றுள்ளார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களால் தலைப்பாகை அணிவிக்கப்பட்டு தளபதியாக நியமிக்கப்பட்ட பெருமையையும், சுவனத்திற்காக நற்செய்தி வழங்கப்பட்ட பெருமையையும், ஆயிஷா (ரழி) அவர்களால் பிரத்யேகமாகப் பிராத்திக்கப்பட்டவருமான, இத்தகைய பாக்கியத்தைத் தவிர வேறு எது தான் ஒருவருக்கு இந்த உலகத்தில் வேண்டும்?


இதுவே அவர் செய்த பெரும் பாக்கியம் தானே..!


தபூக் யுத்தம்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தபூக் யுத்தத்திற்காக வேண்டி முஸ்லிம் வீரர்களைத் தயாராகும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தக் கட்டளையினை அடுத்து, அந்தப் போருக்காக வேண்டி மிகப் பெரிய பொருளாதார வளமும் தேவைப்பட்டது. அதனையும் முஸ்லிம்களிடம் முறையிட்டார்கள். ஏனென்றால் மிக நீண்ட தூரம் பயணம், அந்தப் பயணத்தில் வரக் கூடிய வீரர்களுக்கான உணவு மற்றும் செலவினங்களுக்கு அதிகப் பொருளாதாரம் தேவைப்பட்டது. ஆனால் பயணத்திற்குத் தேவையான பொருள் வளமும், ஒட்டகம், குதிரை போன்ற வாகன வசதியும் மிகவும் குறைவாகவே முஸ்லிம்களிடம் இருந்தது. இதன் காரணமாக, வருவதற்கு விருப்பம் கொண்டிருந்த பலர் வாகன வசதியின்மை காரணமாக மதீனாவிலேயே தங்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகியது. தங்களால் வர இயலவில்லை என்னும் மனக் கவலையின் காரணமாக பலர் அழுத நிலையில் இருந்து கொண்டிருந்தனர். தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளும் பேறும், அதனுடைய நற்கூலியும் நமக்குக் கிடைக்கவில்லையே என்னும் வருத்தம் அவர்களை மேலிட்டது. எனவே, இந்தப் போருக்கு ஜய்ஸே உஸ்ரா - அதாவது மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உருவான படை என்ற புனைப் பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தப் போருக்குத் தேவையான தளவாடப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களைச் சேகரிப்பதற்காக முஸ்லிம்கள் தாராளத்தன்மையைக் காட்டும்படி வேண்டி நின்றார்கள்.


இந்தப் போரிலும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் மிகவும் தாராளமாக பொருளுதவி செய்தார்கள். ஒரு பை நிறைய வெள்ளிக் கட்டிகளைக் கொண்டு வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து கொடுத்தார்கள்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே..! இஸ்லாமிய வரலாறு தவிர வேறு எங்கும் இவர்களைப் போன்றதொரு கொடையாளிகளை, தங்களது இவ்வுலக வளங்களைத் தானமாகக் கொடுத்து, மறுவுல அருட்கொடைகளுக்கு ஆசை கொண்டவர்களைப் பார்க்க இயலாது.


இப்பொழுது, இஸ்லாமியப் படை தபூக் நோக்கி நகர்ந்த பொழுது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களும் அந்தப் படையில் இணைந்து கொண்டார்கள். முஸ்லிம் படை ஒரு இடத்தில் பயணத்தை இடை நிறுத்தி ஓய்வெடுத்த பொழுது, அங்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இல்லாத காரணத்தால் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் முன்னிற்க தொழுகை நடத்தப்பட்டது. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் இமாமாக முன்னின்று தொழுகையை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, இடையில் வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொடைத்தன்மைக்கும், பரிசுத்த ஆன்மாவுக்கும், நேர்மைக்கும் பெயர் போன தனது ஆருயிர்த் தோழரைப் பின்பற்றி தொழ ஆரம்பித்தார்கள்.

இத்தகைய அருமையான பாக்கியமும் கௌரவமும் வேறு யாருக்குத் தான் கிட்டும்! இத்தகைய மாபெரும் கௌரவத்தை தனது ஆருயிர்த் தோழருக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வழங்கிக் கௌரவித்தார்கள். இந்தப் பூமியில் வந்துதித்த இந்த மனிதப் புனிதர்களை பூமிக்கும் மேலாக இருக்கக் கூடிய அந்த ஏழு வானங்களுக்கு அப்பாலும், இன்னும் அதற்கும் மேலானதொரு உயர்தரமான சுவனத்தில் பிரவேசிக்கும் நற்பாக்கியமிக்கவர்களாக உயர்த்திக் காட்டினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.


மக்கா வெற்றி

இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் பிரபல்யமான வரலாற்றுச் சம்பவமான மக்கா வெற்றியின் பொழுதும், இன்னும் அதனை அடுத்து ஹஜ்ஜத்துல் வதா என்ற இறுதி ஹஜ்ஜின் பொழுதும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் உடன் இருந்த நற்பேறு பெற்றவருமாவார்.


ஹிஜ்ரி 10 ம் ஆண்டு, இறைவனது அழைப்பின் பேரில் இந்த உலகை விட்டுப் பிரிந்தார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். அதன் பின் இஸ்லாமிய உம்மத்திற்கு தலைமைப் பொறுப்பு வகிப்பது யார் என்றதொரு பிரச்னை எழுந்த பொழுது, அந்தப் பிரச்னையைத் தீர்த்து அபுபக்கர் (ரழி) அவர்களை தலைமைப் பொறுப்பிற்குக் கொண்டு வருவதற்காக, முக்கியப் பங்காற்றியவர்களில் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களும் ஒருவராவார்.

பின் அபுபக்கர் (ரழி) அவர்கள் மரண தருவாயில் இருந்த பொழுது, தனக்கு அடுத்த யாரை தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வருவது என்பதற்காக, அபுபக்கர் (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களிடம் ஆலோசனை செய்த பிறகே, உமர் (ரழி) அவர்களது பெயரை அடுத்த கலீபா பதவிக்காக முன்மொழிந்தார்கள். உமர் (ரழி) அவர்கள், தொழுகையில் இமாமாக நின்று கொண்டு தொழ வைத்துக் கொண்டிருந்த பொழுது தாக்கப்பட்டு, கீழே விழுந்தவுடன் உடனடியாகச் செயல்பட்டு,இமாமாக முன்னின்று தொழுகையை நடத்தியவர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) ஆவார்கள். தொழுகையை முடித்துக் கொண்டவுடன், உடனடியாக உமர் (ரழி) அவர்களை அவரது இல்லத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அப்பொழுது, உங்களுக்கு அடுத்து தலைமைப் பதவிக்கு யாரை நியமிக்க வேண்டும் என்பதனை அறிவித்து விடுமாறு உமர் (ரழி) அவர்களுக்கு ஆலோசனை கூறினார்கள்.

அப்பொழுது ஆறு நபர்கள் கொண்ட கமிட்டியை அமைத்து அவர்களுக்குள் ஒருவரை மூன்று நாட்களுக்குள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு உமர் (ரழி) அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். அந்த ஆறு நபர்கள் கொண்ட கமிட்டியில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களும் ஒருவராவார்.

உமர் (ரழி) அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டதன் பின் இரண்டாம் நாளில், அடுத்த கலீபாவாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற ஆலோசனை நடத்தப்பட்டது. ஆறு பேர் கொண்ட கமிட்டிக்குப் பதிலாக அதனை மூன்றாகக் குறைத்துக் கொள்ளுமாறு அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் ஆலோசனை கூற, அந்த ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின், தல்ஹா (ரழி) அவர்கள் தனது இடத்தை உதுமான் பின் அஃப்பான் (ரழி) அவர்களுக்காக விட்டுக் கொடுக்க, அலி (ரழி) அவர்களுக்கு ஆதரவாகத் தனது இடத்தை சுபைர் (ரழி) அவர்கள் விட்டுக் கொடுக்க, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்கு ஆதரவாக சஅத் (ரழி) அவர்கள் விட்டுக் கொடுத்தார்கள். இதில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் தனது இடத்தை தானே விட்டுக் கொடுத்து, தனது வாக்கை உதுமான் (ரழி) அவர்களுக்கு ஆதரவாக வழங்கியதன் காரணமாக, மிகவும் எளிய முறையில் பிரச்னைகள் இன்றி, புதிய கலீபாவாக உதுமான் (ரழி) அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

உதுமான் (ரழி) அவர்களது கரங்களில், முதன் முதலில் பைஅத் என்ற உறுதிப்பிரமாணத்தை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களே வழங்கினார்கள். இதன் மூலம் இந்த உம்மத்தை அலைக்கழிக்கக் கூடிய பிரச்னைகள் பல எழுந்த பொழுது, அதனை சாதுர்யமாகவும், தொலைநோக்குச் சிந்தனையுடனும் தீர்த்து வைத்த பெருமைக்குரியவர்களாக அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

அமீருல் முஃமினீன் உதுமான் பின் அஃப்பான் (ரழி) அவர்கள் கூறினார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நான் கேட்டிருக்கின்றேன், எனக்குப் பின்னால் இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களான எனது மனைவிமார்களை நாணயமும், நம்பிக்கையும், நேர்மையும், தூய்மையான சிந்தனையும் கொண்ட ஒருவர் பாதுகாக்கக் கூடியவராக இருப்பார். அந்த வகையில், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) தனது கடமையைச் சரியாகச் செய்தார் என்று உதுமான் (ரழி) அவர்கள் குறிப்பிடக் கூயடிவர்களாக இருந்தார்கள்.

ஒரு ஹஜ்ஜின் பொழுது, இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்ததோடல்லாமல், அவர்களுக்கு சரியாக வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். பயண நெடுகிலும் அவர்களது தனிமைக்காக வேண்டிய பிரத்யேக ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். அந்த ஹஜ் நெடுகிலும் அவர்களது கண்ணியத்தையும், கௌரவத்தையும் பேணிப் பாதுகாக்கும் விதத்தில் அத்தனை ஏற்பாடுகளும் அமைத்திருந்தார். இத்தனையையும், அவர்கள் தனக்காக பிரத்யேகமாகப் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்காகவே செய்திருந்தார்.

உதுமான் (ரழி) அவர்கள் கலீபாவாக இருந்த காலத்தில், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் இறையடி சேர்ந்தார்கள். உதுமான் (ரழி) அவர்கள் முன்னின்று நல்லடக்கத்தை செய்தார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களது உடல் ஜன்னத்துல் பக்கீயில் நல்லடக்கம் செய்யப்பட்டது.































































 WWW.OTTRUMAI.NET.

Saturday, August 7, 2010

ஏகத்துவக் கலிமாவின் நிபந்தனைகள் – புதுப் புலர்வுடன்!

எழுதியவர்:மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

அரபி மூலம்: சுலைமான் அல்-முதைரி; தமிழாக்கம்: அபூ அரீஜ்



லாயிலாக இல்லல்லாஹ் என்றால், உண்மையாகவே வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை என்பதாகும்.

“யார் (உண்மையாகவே) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று கூறி, அல்லாஹ் அல்லாதவர்கள் வணங்கப்படுவதை நிராகரிக்கிறாரோ அவரது செல்வமும் அவருடைய உயிரும் பாதுகாக்கப்பட வேண்டியதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

         “அது, நிச்சயமாக அல்லாஹ்வே மெய்யானவன். அவனைத் தவிர அவர்கள் அழைப்பது பொய்யானதாகும்” (அல்-குர்ஆன் 31:30)

        இத்திருகலிமாவிற்கு மார்க்க அறிஞர்கள் ஏழு முதன்மையான நிபந்தனைகளைக் குறிப்பிடுகின்றார்கள். அவற்றை அறிந்து பின்பற்றி வாழ்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.

         மாறாக அவற்றை மனனம் செய்துக் கொண்டு
கடைப்பிடிக்காமலிருப்பதல்ல. இந்நிபந்தனைகள் அனைத்தும்
அல்-குர்ஆனையும் அல்-ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு
தொகுக்கப்பட்டதாகும். உதாரணமாக தொழுகைக்கு நிபந்தனைகள் பல இருப்பதைப் போன்றதாகும். இங்கே குறிப்பிடப்படுகின்ற நிபந்தனைகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்படுகின்ற போது தான் “லாயிலாஹ இல்லல்லாஹ்வை” மொழிந்தவனுக்கு பயனளிக்கும் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும். இங்கே ஒவ்வொரு நிபந்தனைக்கும் இரு உப நிபந்தனைகள் தரப்படுகின்றன. இந்த உப நிபந்தனைகள் தான் இங்கே கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியதாகும்.


உப நிபந்தனைகள்: -

a) ஒவ்வொரு நிபந்தனைக்கும் பேணப்பட வேண்டிய அடிப்படை அம்சம் (பூரண விசுவாசியாகும் நிலை)

b) குறிப்பிட்ட அந்நிபந்தனையை முறிக்கும் காரியங்கள் (அதாவது அவனை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும்)


முதன்மையான ஏழு நிபந்தனைகள்: -

1) அறிவு: -

அதாவது, வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே என்றும் அவனல்லாதவைகளை வணங்குவது தவறானது, அவைகளால் யாருக்கும் உதவி, தீமை செய்ய முடியாது என்பதை எவ்வித மறுப்புமின்றி ஏற்றுக் கொள்வதாகும்.

“ஆகவே (நபியே) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை என்பதை நீர் அறிந்துக் கொள்வீராக” (அல்-குர்ஆன் 47:19)

இந்த வசனத்தின் மூலம் அறிவைத் தொடர்ந்து தான் அமல்கள் இடம் பெற வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

“உண்மையாகவே வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை என்பதை அற்ந்த நிலையில் எவர் மரணிக்கிறாரோ அவர் சுவனம் நுழைவார்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த ஹதீஸ் மூலமாக அறிவார்ந்த செயல்பாடு தான் ஒருவனை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் இந்த அறிவை  அடிப்படையாக வைத்து செயலாற்ற வேண்டும். இல்லையென்றால் நாளை மறுமையில் நமக்கெதிராக அமல்கள் கொண்டு வரப்படும்.

1a) இந்த நிபந்தனையில் பேணப்பட வேண்டிய அம்சம்: -

   இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்கள், கடமையான விஷயங்கள், அறியாமை காரணமாக செய்வதால் நிராகரிப்பை ஏற்படுத்தக் கூடிய தடுக்கப்பட்ட விஷயங்கள் என்பவற்றை அறிந்த நிலையில், உண்மையாகவே வணக்கத்திற்குச் சொந்தக் காரண் அல்லாஹ் மட்டும் தான் என்பதையும், அவனன்றி வணங்கப் படுபவைகள் அனைத்தும் நிராகரிக்கப்படி வேண்டியவைகள் என்பதையும் அறிந்திருத்தல் வேண்டும்.

1b) இந்த நிபந்தனையை முறிக்கும் காரியங்கள்: -

     வணக்கத்திற்குரியவன் உண்மையாகவே அல்லாஹ் தான் என்பதை அறியாமலிருத்தல், அல்லாஹ் அல்லாதவைகளையும் வணங்கலாம் அவைகள் இணைவைப்பை ஏற்படுத்தாது என்பதை என்று நினைத்தல், அல்லது இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்கள், வாஜிபுகள், இஸ்லாத்தை விட்டும் வெளிறே்றக் கூடிய தடுக்பட்ட விஷயங்களை அறியாமலிருத்தல் போன்றனவாகும்.

உதாரணம்: அவ்லியாக்களிடம் பிரார்த்திக்கலாம் என்று நினைப்பது. (இதனைச் செய்தால் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவான்)


2) மன உறுதி: -

     அதாவது, எவ்விதமான சந்தேகமுமின்றி உறுதியுடன் நம்ப வேண்டும். இவ்வடிப்படையில் கடுகளவேனும் சந்தேகப்படக் கூடாது.

       “(உண்மையான) விசுவாசிகள் யாரென்றால், அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விசுவாசங்கொண்டு, பின்னர் எவ்வித சந்தேகமும் கொள்ளாதிருந்தவர்கள்” (அல்-குர்ஆன் 49:15)

இவ்வசனத்தில் அவர்களுடைய மன உறுதியானது, அவர்களின் உண்மைத் தன்மையைப் பறை சாற்றுகின்றது. இதில் சந்தேகம் கொள்வது நயவஞ்சகமாகும்.

“உண்மையாகவே வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வென்றும், நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுகின்றேன். எந்தவொரு அடியான் இவ்விரு விடயங்களிலும் சந்தேகமற்றவனாக அல்லாஹ்வைச் சந்திக்கின்றானோ அவன் சுவர்க்கம் நுழைவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    இந்த ஹதீஸில் ஒருவன், சுவனம் நுழைவதற்கு, ஷஹாதா கலிமாவைப் பொறுத்தவரை மன உறுதி எனும் நிபந்தனை மிகவும் கண்டிப்பான ஒரு விஷயமாகக் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த அடிப்படையில் சந்தேகம் கொள்வது நிராகரிப்பாகும்.


2a) இந்த நிபந்தனையில் பேணப்பட வேண்டிய அம்சம்: -

உண்மையாகவே வணக்கத்திற்குச் சொந்தக்காரன் அல்லாஹ் மட்டும் தான் என்பதையும், அவனன்றி வணங்கப்படுபவைகள் இணைவைப்பாகும் என்பதனை சந்தேகத்திற்கு இடமின்றி மன உறுதியுடன் நம்புவதாகும். அத்துடன் இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்கள், கடமையான விஷயங்கள் மன உறுதி இல்லாமையின் காரணமாக நிராகரிப்பை ஏற்படுத்தக் கூடிய தடுக்கப்பட்ட விஷயங்கள் போன்றவற்றை அறிந்திருத்தல் வேண்டும்.

2b) இந்த நிபந்தனையை முறிக்கும் காரியங்கள்: -

         மேலே குறிப்பிட்ட விஷயங்களில் சந்தேகம் ஏற்பட்டால் அல்லது அல்லாஹ் அல்லாதவைகளும் வணங்கப்படத் தகுதியானவைகள் தான் என்றோ அல்லது அச்செயல் இணைவைப்பாகாது என்றோ கருதினால் இந்த நிலை அவனை இஸ்லாத்தை விட்டே வெளியேற்றிவிடும்.

3) ஏற்றுக் கொள்ளல்: -

அதாவது இந்த சாட்சியத்தை மறுப்பின்றி ஏற்றுக் கொள்ளவேண்டும். அவற்றில் எதுவொன்றையும் நிராகரிப்பதோ மறுப்பதோ கூடாது.

“அல்லாஹ்வையும், எங்கள் பால் இறக்கப்பட்ட (இவ் வேதத்)தையும் நாங்கள் விசுவாசிக்கிறோம் என (விசுவாசங்கொண்டோரே) நீங்களும் கூறுங்கள்” (அல்-குர்ஆன் 2:136)

மேலும் “அல்லாஹ்வைத் தவிர (உண்மையாகவே) வணக்கத்திற்குரிய நாயன் வேறு யாருமில்லை என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் நிச்சயமாக அவர்கள் பெருமையடிப்பவர்களாக இருந்தனர். நாங்கள் பைத்தியக்காரரான ஒரு கவிஞருக்காக எங்களுடைய வணக்கத்திற்குரியவர்(களான தெய்வங்)களை நிச்சயமாக விடுகின்றவர்களாக?என்றும் அவர்கள் கூறுபவர்களாக இருந்தனர்” (அல்-குர்ஆன் 31:35-36)

இந்த வசனம் பெருமையின் காரணமாக ஏக தெய்வக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல் அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆற்பட்டார்கள். எனவே ஏற்றுக் கொள்ளுதல் என்பது இங்கு ஒரு முக்கிய நிபந்தனையாக இடம் பெறுகிறது.

3a) இந்த நிபந்தனையில் பேணப்பட வேண்டிய அம்சம்: -


இத்திருக்கலிமா உள்ளடக்கியிருக்கின்ற விஷயங்களையும், இஸ்லாத்தின் ஏவல் விலக்கல்களையும் மனதார ஏற்றுக்கொள்வதாகும்.


3b) இந்த நிபந்தனையை முறிக்கும் காரியங்கள்: -

இத்திருக்கலிமா பொதிந்துள்ள விஷயங்களில் ஒன்றை அது மார்க்கத்திலிலுள்ள விஷயம’ என்பது தெரிந்திருந்தும் அதனை அவன் நிராகரித்தால் அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிடுகிறான்.

  உதாரணம்: – இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒருவன் கண்டிப்பாக எல்லா வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஒருவனுக்கு மடடும் தான் செலுத்த வேண்டும். அதே நேரம் பரவாயில்லை அவ்லியாக்களிடமும் பிரார்த்திப்போம் என்று சொன்னால், அவன் இன்னும் ஏக தெய்வக் கொள்கையை சரியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது. எனவே குறிப்பிட்ட அந்த இணைவைப்பானது அவனை இஸ்லாத்தை விட்டும் வெளிறே்றி விடுகின்றது.


4) கட்டுப்படுதல் (கீழ்படுதல்): -

அதாவது, அல்லாஹ்வைத் தனது வணக்கத்திற்குரிய நாயனாகவும், முஹம்மது (ஸல்) அவர்களை அவனது நபியாகவும் தூதராகவும் ஏற்று இக்கலிமாவின் கடமைக்குக் கட்டுப்படவேண்டும்.


“இன்னும் உங்கள் இரட்சகன் பால் (தவ்பாச் செய்து) நீங்கள் திரும்பிவிடுங்கள். அவனுக்கு (முற்றிலும்) நீங்கள் கீழ்படிந்தும் விடுங்கள்” (அல்-குர்ஆன் 39:54)

செயல்களற்ற நம்பிக்கை மட்டும் எந்த பிரயோசனமும் அளிக்காது. உதாரணமாக: அபூதாலிப் அண்ணலார் நபி என்பதில் உறுதியாக இருந்தார். அவரை உண்மைப் படுத்தவும் செய்தார்.  அதுமட்டுமல்ல அண்ணலாருக்கு உதவி ஒத்தாசையாகவும் இருந்தார். ஆனால் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு கீழ்படியாத போது அல்லாஹ்வின் நேசத்தைப் பெறாமல் இணைவைப்பாளர்களில் ஒருவரானார் என்பதை நாம் வரலாற்றில் காணமுடிகின்றது.

‘எவர் – அவர் நன்மை செய்கிறவராயிருக்கும் நிலையில் (தனது காரியத்தை முழுமையாக ஒப்படைத்து) அல்லாஹ்வின் பால் தன் முகத்தைத் திருப்புகிறாரோ, அவர் நிச்சயமாக மிகமிக பலமானதொரு கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டார்’ (அல்-குர்ஆன் 31:22)


மேற்கண்ட வசனத்தின் விளக்கம் : -

‘எவர் நன்மை செய்கிறவராயிருக்கும் நிலையில்’ என்றால் அண்ணலாரின் வழிமுறையைப் பின்பற்றி வாழுதல் என்பதாகும்.

‘அல்லாஹ்வின் பால் தன் முகத்தைத் திருப்புகிறாரோ’ என்பது, அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, அவனுக்குக் கீழ்படிந்து, எல்லா அமல்களிலும் மனத்தூய்மையைக் கைப்பிடித்து இணைவைக்காமலும் இருத்தலுமாகும்.

‘நிச்சயமாக மிகமிக பலமானதொரு கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொண்டார்’ என்றால், ஏகத்துவக் கலிமாவான கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டு தண்டையிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டார் என்பதாகும்.

இந்த வசனத்தில் ‘அல்லாஹ்வின் பால் தன் முகத்தைத் திருப்புகிறாரோ: என்ற பகுதி அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவனுக்குக் கீழ்படிதலைக் குறித்து நிற்கின்றது.


4a)இந்த நிபந்தனையில் பேணப்பட வேண்டிய அடிப்படை அம்சம்: -

    எந்த விஷயங்களை விடுவதால் ஒருவனை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றுமோ அவைகளில் கவணமாக இருந்து அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களுக்கு கீழ்படிதலாகும்.

4b) இந்த நிபந்தனையை முறிக்கும் காரியங்கள்: -


அ) எதாவது ஒரு கடமையை முழுமையாக விடுதல்

ஆ) குறிப்பாக முழுமையாக விடுதல்

இ) ஏகத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒன்றை விடுதல் அல்லது

இ) ஏகத்துவக் கொள்கையை நிலை நிறுத்தும் விஷயங்களில் ஒன்றை விடுதல் மூலம் ஒருவனை நிராகரிப்பாளனாக்கும் செயல்களைச் செய்தல்.


உதாரணம்: – முஸ்லிம்களை நேசிக்காமலிருத்தலும், இஷைவைப்பாளர்களை விட்டும் ஒதுங்கியிருக்காமலித்தலும் இதில் அடங்கும்.


5) உண்மை: -

அதாவது உண்மையாகவே அல்லாஹ்வை பயந்த நிலையில் இந்தக் கலிமாவிற்கு கட்டுப்பட்டு இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகும்.


‘விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்துக் கொள்ளுங்கள்! (சொல்லாலும், செயலாலும்) ண்மையாளர்களுடன் ஆகிவிடுங்கள்’ (அல்-குர்ஆன் 9:119)

இந்த வசனம் உண்மை எனும் நிபந்தனையின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. இந்த நிபந்தனை நீங்கும் போது அவ்விடத்தை பொய்யும் நயவஞ்சகமும் இடம் பிடிப்பதை நாம் அறிந்துக் கொள்ள முடியும். அதே போன்று இந்த நிபந்தனை நீங்கும் போது அதற்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கமும் கைநழுவிப் போய்விடும்.

‘எவர் (உண்மையாகவே) வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதத் என்றும் சாட்சி கூறுகிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கி விடுகிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்! ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.

5a) இந்த நிபந்தனையில் பேணப்பட வேண்டிய அடிப்படை அம்சம்: -


இத்திருக்கலிமா உள்ளடக்கியவற்றை உண்மையாகவே ஈமான் கொள்ள வேண்டும். அதில் எல்லளவும் சந்தேகத்திற்கு இடமளிக்கக் கூடாது.


5b) இந்த நிபந்தனையை முறிக்கும் காரியங்கள்: -


அ) அந்த திருக்கலிமாவை ஆரம்பமாகவே பொய்யாக மொழிதல்

ஆ) இத்திருக்கலிமா உள்ளடக்கியுள்ளவற்றை பின்னர் பொய்படுத்தல்


6) மனத்தூய்மை: -

அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே எனும் மனத்தூய்மையுடன் நிறைவேற்ற வேண்டும். எந்த வகையான உலக இலாபங்களும் எதிர்பார்ப்புகளும் இருக்கக் கூடாது.

‘ தூய மார்க்கம் (வழிபாடு) அல்லாஹ்வுக்கே உரித்தானது என்பதை அறிந்துக் கொள்வீராக’ (அல்-குர்ஆன் 39:3)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

தனது உள்ளத்திலிருந்து மனத்தூய்மையோடு எவன் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறுகிறானோ அவன் தான் (மறுமையில்) எனது பரிந்துரைக்கு மிகவும் தகுதியானவன்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி.

  இந்த ஹதீயில் இஹ்லாஸ் எனும் மனத்தூய்மை ஷஹாதா கலிமாவில் பிரதானமாகும் என்பது புலனாகின்றது. அத்துடன் மனத்தூய்மை அற்றுப் போகின்றபோது அண்ணலாரின் பரிந்துரை இல்லாமல் போவதை உணர்ந்துக் கொள்ள முடிகின்றது. இதே போன்று இன்னும் எத்தனையோ ஹதீஸ்களில் எவர் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுகின்றாரோ அவர் மீது நரகம் ஹராமாகின்றது போன்ற ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளது. இது வாஜிபான ஏகத்துவக் கொள்கை பூரணமாகின்ற போது தான் சாத்தியமாகும் என்பதனை அறிந்துக் கொள்ள வேண்டும்.


இந்தக் கொள்கை நிறைவேற சில நிபந்தனைகள் அவசியம்: -

- வாஜிபான கடமைகளை நிறைவேற்றுதல்

- இரண்டு வகையான (சிறிய, பெரிய) இணைவைப்புகளிலிருந்து நீங்கியிருத்தல்

- பெரும்பாவங்களை விட்டும் நீங்கியிருத்தல்

மனத்தூய்மைக்கு எதிரானது இணைவைப்பு, முகஸ்துதி போன்றவைகளாகும். ஒரு முஸ்லிம் மனத்தூய்மையற்றவனாக தனது அமல்களைச் செய்கின்ற போது அந்த அமல்கள் அனைத்தும்

பயனற்றுப் போவது மட்டுமல்லாமல் தண்டைனையையும் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் (இம்மையில்) அவர்கள் செயலால் செய்து கொண்டிருந்தவற்றின் பால் நாம் முன்னோக்கி, பின்னர் (அவர்கள் உலகில் விசுவாசம் கொள்ளாததால்) பரத்தப்பட்ட புழுதியாக

(பயனற்றதாக) அவைகளை நாம் ஆக்கிவிடுவோம். (அல்-குர்ஆன் 25:23)


6a) இந்த நிபந்தனையில் பேணப்பட வேண்டிய அம்சம்: -

இறை நம்பிக்கையில் அல்லது செயல்பாடுகளில் அல்லது சொற் பிரயோகங்களில் ஷிர்க் கலந்துவிடாமலிருக்க வேண்டும்.

6b) இந்த நிபந்தனைணை முறிக்கும் காரியங்கள்: -

எவனது இறை நம்பிக்கையிலோ அல்லது செயல்பாடுகளிலோ அல்லது சொற்பிரயோகங்களிலோ ஷிர்க்கின் ஒரு பகுதியாவது கலந்து விட்டால் குறிப்பிட்ட அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிட்டான்..

உதாரணம்: -

அப்துல் காதிர் ஜீலானிக்கு அறுத்துப் பலியிடலாம் என்று எண்ணினாலோ அல்லது அறுத்துப் பலியிட்டாலோ அல்லது அந்த விஷயம் கூடும் என்று கூறினாலோ அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிடுகிறான்.


7) நேசம்: -

      அதாவது இத்திருக்கலிமா மூலம் ஏற்படக் கூடிய கொள்கை கோட்பாடுகளை நேசித்தல், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் (அதே போன்று அவனுக்கு வழிபட்டு நடக்கும் நல்லடியார்களையும் அத்து மீறாமல்) நேசித்தலாகும். இறுதியாக அல்லாஹ்வின் ஏவல்களை எடுத்து விலக்கல்களைத் தவிர்ந்து நடப்பதாகும். இது அல்லாஹ்வின் மீது அன்புக் கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றி அவனுடைய தண்டனையைப் பயந்து அவனது நற்கூலிக்கு ஆதரவு வைத்ததாகவும் வேண்டும். ஒரு மனிதன் அல்லாஹ்வை நேசிக்கிறான் என்பதற்கான அடையாளம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முழுமையாகப் பின்பற்றுவது தான்.

‘(நபியே) நீர் கூறுவீராக, நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்; (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்து விடுவான். (அல்-குர்ஆன் 3:31)

    மனிதர்களில் அல்லாஹ்வையன்றி அவனுக்கு இணையாளர்களை (சமமானவர்களாக) ஆக்கிக் கொண்டு அல்லாஹ்வை நேசிப்பது போன்று அவர்களை நேசிப்பவர்களும் இருக்கின்றனர்… அவர்கள் நரக நெருப்பிலிருந்து வெளியேறவே மாட்டார்கள். (அல்-குர்ஆன் 2:165-167)

     உண்மையான நேசத்தில் அல்லாஹ்வுக்கு அவனது படைப்பினங்களை நிகராக்குவது ஒருவனை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றி அவனை நிரந்தர நரகவாதியாக மாற்றும் என்பது தெளிவாகின்றது.

        எனவே இங்கு குறிப்பிடப்படும் நேசம் என்பது ஒரு மிகப் பெரிய வணக்கமாகும். அல்லாஹ்வோடுள்ள நேசமானது அதில் அதில் எவ்வித கலங்கமுமு; அற்ற நிலையில் இருக்க வேண்டும். அப்போது தான் உண்மையான விசுவாசியாக அது அவனை மாற்றும்.எனவே தான் இது ஷஹாதா கலிமாவின் நிபந்தனைகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.


7a) இந்த நிபந்தனையில் பேணப்பட வேண்டிய அடிப்படை அம்சங்கள்: -

அ) அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசித்தல்

ஆ) இத்திருக்கலிமா உள்ளடக்கிய விஷயங்களை நேசித்தல்

இ) முஃமின்களை நேசித்தலும் இணைவைத்தலையும் இணைவைப்பாளர்களையும் வெறுத்தல்


7b) இந்த நிபந்தனையை முறிக்கும் காரியங்கள்: -

அ) அல்லாஹ்வுக்கு நிகராக ஒன்றை நேசித்தல் (உதாரணம் : நாகூர் ஆண்டவரை அல்லாஹ்வை நேசிப்பது போன்று நேசித்தல். இது நிராகரிப்பாகும்.

ஆ) இத்திருக்கலிமாவின் உள்ளடக்கங்களில் ஒன்றை வெறுத்தல்

இ) இணைவைப்பiயும், இணைவைப்பாளர்களையும் வெறுக்காமலிருத்தல்.

மன்னிக்கப்படாத பாவம் – (பாகம் 1)

அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.

வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாரும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள் மீதும், நம் மீதும் மற்றும் கியாம நாள் வரை அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றக் கூடிய முஸ்லிம்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக. ஆமீன்.


அன்பான சகோதர சகோதரிகளே, அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்: -

‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)


இந்த வசனத்தில் அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான் என்று கூறியிருப்பதை சற்று கவனத்துடன் ஆராயவேண்டும். ஏனென்றால் இறைவனின் மன்னிப்பே கிடைக்காத இணைவைப்பது என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொண்டு அவற்றிலிருந்து முற்றிலுமாக தவிர்ந்து இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது.

இணைவைக்கும் ஒருவருக்கு அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்காததோடு மட்டுமில்லாமல் அவர் தம்முடைய வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் அழிந்து நிரந்தர நரகத்திற்கு வழிவகுக்கும்.

1) இணைவைத்தலின் தீமைகள்: -

1.ஒருவர் தம் வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் பாழாகிவிடும்

2.இறைவன் இணைவைத்தலைத் தவிர ஏனைய பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னிப்பான்

3.இணை வைத்தவனின் கதி மிகவும் மோசமானது

4.இறைவனுக்கு இணை கற்பித்தால் நிரந்தர நரகம்.

நல்லமல்களை அழித்துவிடும் ஷிர்க்: -

அல்லாஹ் கூறுகிறான்: -

இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும். (அல்குர்ஆன் 6:88)

அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், ‘நீவிர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்’ (என்பதுவேயாகும்). ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக! (அல்குர்ஆன் 39:65 & 66)

இணைவைத்தலைத் தவிர ஏனைய பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னிப்பான்: -

அல்லாஹ் கூறுகிறான்: -

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (அல்குர்ஆன் 4:48 )


இணை வைத்தவனின் கதி: -

அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)


இறைவனுக்கு இணை கற்பித்தால் நிரந்தர நரகம்.

அல்லாஹ் கூறுகிறான்: -

“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )

இந்த அளவிற்கு படுபயங்கரமான இணைவைத்தல் என்பது பற்றி நாம் முழுவதுமாக அறிந்திருக்க வில்லையானால் அவற்றிலிருந்நு பரிபூரணமாக தவிர்திருப்பது என்பது இயலாத காரியம். எனவே ஷிர்க் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை என்பவை பற்றி இந்த சிறிய ஆய்வுக் கட்டுரையில் ஆராய்வோம்.

இன்று நமது சமுதாயத்தில் இணைவைப்பது (ஷிர்க்) என்றால் என்ன என்று கேட்டால் மிக எளிதாக கிடைக்கும் பதில் ‘சிலைகளை வணங்குவது’ என்றே நம்மில் பெரும்பாலோர் கூறுவர். இவ்வாறு இவர்கள் கூறுவதற்கு காரணம் இணை வைப்பது என்றால் என்ன என்பதைப் பற்றிய அறியாமையே ஆகும்.


2) ஷிர்க் என்றால் என்ன?

ஷிர்க் என்பது தவ்ஹீத் (அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்) என்பதற்கு நேர்மாற்றமான அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலாகும்.


அதாவது ஷிர்க் என்பது,

- அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாத பிறருக்கு செய்வது


- அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய ஆற்றல்களில் சிலவற்றை அல்லாஹ் அல்லாத பிறருக்கும் இருப்பதாக கருதுவது


ஆகியவையாகும்.


ஷிர்கின் வகைகள்: -


ஷிர்கில் மூன்று வகைகள் உள்ளன. அவைகளாவன: -


1.பெரிய ஷிர்க்

2.சிறிய ஷிர்க்

3.மறைமுக ஷிர்க்

பெரிய ஷிர்க் என்றால் என்ன?

அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்படவேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாதவைகளுக்கு செய்வது பெரிய ஷிர்க் ஆகும்.


சிறிய ஷிர்க் என்றால் என்ன?

அல்லாஹ்வுக்காக செய்யவேண்டும் என்ற நோக்கமில்லாமல் பிறர் பார்த்து பாராட்ட வேண்டும் என்று கருதி வணங்குவது அல்லது
பிறர் தம்மை தவறாக நினைத்து விடக் கூடாது என்பதற்காகவோ அல்லாஹ்வை வணங்குவது  இவ்வாறு வணக்கம் புரிவது சிறிய ஷிர்க் ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் சிறிய ஷிர்க் குறித்து மக்களை எச்சரித்துள்ளார்கள்.


மறைவான ஷிர்க் என்றால் என்ன?


மறைவான ஷிர்க் என்பது அல்லாஹ் நம்மீது விதித்துள்ள கட்டளைகளை ஏற்று அதன் மீது திருப்தி கொண்டு அதன்படி செயல்படாமல் அவற்றை அலட்சியம் செய்வதாகும்.

3) ஷிர்குல் அக்பர் ஒரு விளக்கம்: -

இந்த சிறிய ஆய்வுக்கட்டுரையில் ஷிர்குல் அக்பர் என்று சொல்லப்படக்கூடிய மாபெரும் இணைவைத்தல் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் ஆராய்வோம்.


ஷிர்குல் அக்பர் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்படவேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்கு அல்லாதவர்களுக்கு செய்வதும், அல்லாஹ்வுடைய பண்புகளை ஆற்றல்களை பிறருக்கு இருப்பதாக கருதுவதும் என பார்த்தோம்.

    நம்முடைய சமுதாயத்தில் உள்ளவர்களில் பலர் இஸ்லாத்தின் மூல மந்திரமான ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்பதன் பொருள் அறியாமல் தான் இந்த ஷிர்க் என்ற கொடிய பாவத்தில் சிக்கி உழல்கின்றனர். வணக்கம் என்றால் என்ன என்று கேட்டால் அவர்கள் கூறுவது தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் என்பார்கள். வணக்கம் என்பது இவைகள் மட்டுமன்று. அல்லாஹ்வும் அவனது தூதரும் (ஸல்) எவைகளையெல்லாம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்ய வேண்டுமென்று கட்டளையிட்டு இருக்கிறார்களோ அவைகள் அனைத்தும் வணக்கமாகும். அவற்றை அல்லாஹ்வை விடுத்து மற்றவருக்கு செய்தால் அவைகளும் ஷிர்கின் வகையைச் சேர்ந்ததாகும்.

உதாரணமாக பின்வரும் அனைத்தும் வணக்கத்தின் வகைகளாகும். அவைகளை அல்லாஹ்வுக்கு மட்டுமே நாம் செய்ய வேண்டும்.


■துஆ (பிரார்த்தனை) செய்தல்

■ருகூவு / சஜ்தா செய்தல்

■அழைத்து உதவி தேடுதல்

■பாதுகாவல் தேடுதல்

■நேர்ச்சை செய்தல்

■தவாபு செய்தல்

■சத்தியம் செய்தல்

■குர்பானி கொடுத்தல்

■ஆதரவு / தவக்குல் வைத்தல்

■அல்லாஹ்வைப் போல் பிறரை நேசித்தல்

ஒருவர் மேற்கண்ட அனைத்து செயல்களுமே வணக்கத்தின் வகைகள் என்று அறிந்துக் கொள்வாராயின் இன்ஷா அல்லாஹ் அவர் இந்த வணக்க முறைகளை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்வதிலிருந்தும் தவிர்ந்துக் கொள்வார். ஆனால் இவைகளும் வணக்கமே என்று புரிந்துக் கொள்வதில் தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர்.

    மேலும் ஒருவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக்கூடிய பண்புகள் மற்றும் ஆற்றல்கள் யாவை என அறிந்துக் கொள்வராயின் அவற்றில் இணை வைப்பதிலிருந்தும் தவிர்ந்துக் கொள்வார் இன்ஷா அல்லாஹ்.

    இந்த சிறிய ஆய்வுக் கட்டுரையில் ஒரு சில உதாரணங்களின் மூலம் எவ்வாறெல்லாம் மக்கள் அல்லாஹ்வுக்கு அறிந்தோ அல்லது அறியாமையினாலோ இணை கற்பிக்கின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.

உதாரணம்-1: -

ஒருவர் சிங்கப்பூரிலிருந்து கொண்டு அல்லது உலகின் வேறு எந்த மூலையில் இருந்துக் கொண்டோ நாகூரில் அடக்கமாகியிருப்பதாக் கூறப்படும் ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ்விடம் யா ஷாகுல் ஹமீது பாதுஷாவே என்னுடைய இன்ன தேவையை நீங்கள் நிறைவேற்றித் தந்தால் நான் தங்களின் இடத்திற்கு வருகை தந்து தங்களுக்கு காணிக்கை செலுத்துகிறேன் என நேர்ச்சை செய்வதாக வைத்துக் கொள்வோம்.

    இந்த இடத்தில் நாம் இவருடைய வேண்டுதலை ஆய்வு செய்தோமேயானால் இவர் பல வகைகளில் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவராகிறார். அவைகளாளாவன: -

1) வணக்க வழிபாடுகளில் இணை வைப்பது: -

அல்லாஹ்விடம் மாத்திரமே செய்ய வேண்டிய பிரார்த்தனையை, துஆவை ஷாகுல் ஹமீது அவுலியாவிடம் செய்தல்

அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டிய நேர்ச்சையை ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கு செய்தல்

2) அல்லாஹ்வுடைய பண்புகளில், ஆற்றல்களில் இணை வைப்பது: -

     அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகளாகிய எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் (அஸ் ஸமீவுன்) மற்றும் ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் (பஷீரன்) என்ற பண்புகள், ஆற்றல்கள் ஷாகுல் ஹமீது பாதுஷாவுக்கும் இருப்பதாகக் கருதுவது

   அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்பாகிய ஒருவரின் இதயத்தில் உள்ள இரகசியத்தை அறியும் சக்தி உடையவன் என்ற பண்பை, ஆற்றலை ஷாகுல் ஹமீது பாதுஷாவுக்கும் இருப்பதாகக் கருதி அவரும் மனிதர்களின் இதயங்களிலுள்ளவற்றையெல்லாம் அறிகிறார் என நம்புவது.

அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்பாகிய பிரார்த்தனையை செவிமெடுத்து அதை நிறைவேற்றித் தரும் ஆற்றல் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் இருப்பதாக கருதுவது.

சகோதர, சகோதரிகளே இங்கு நாம் கவனமாக சிந்திக்க வேண்டும். ஏனெனில் அறிந்தோ அல்லது அறியாமலோ சர்வ சாதாரணமாக நம்மில் சிலர் செய்கின்ற இந்த வேண்டுதலில் இத்தனை வகையான ஷிர்க் நிறைந்துள்ளது. ஒருவர் மேற்கண்ட உதாரணத்தில் உள்ள பிரார்த்தனை (துஆ) செய்தல் மற்றும் நேர்ச்சை செய்தல் போன்ற வணக்கங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டியவை என்றும், மேற்கண்ட உதாரணத்தில் கூறப்பட்ட பண்புகள் அல்லாஹ்வுக்கு மற்றுமே உரித்தானது என்றும் உணர்ந்துக் கொண்டால் அவர் இன்ஷா அல்லாஹ் இத்தகைய இணை வைத்தல்களிலிருந்து தவிர்ந்துக் கொள்வார். இவற்றை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் ஒளியில் ஆராய்வோம்.


துஆ (பிரார்த்தனை) செய்வதும் ஒரு வணக்கமே!: -

அல்லாஹ் கூறுகிறான்: -

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக (அல் குர்ஆன் 2:186)

      உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள். (அல் குர்ஆன் 40:60)

    மேலும் அல் குர்ஆனின் வசனங்கள் 2:286, 7:55, 18:28, 35:14, 72:18 அனைத்தும் அல்லாஹ்விடமே பிரார்த்தனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

        பிரார்த்தனை (துஆ) ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் -ரலி, நூல்:அபூதாவூத், திர்மிதி)


மேற்கண்ட வசனங்கள் மற்றும் நபி மொழியில் இருந்து நாம் பெறும் தெளிவுகள் யாவை எனில்: -

■துஆ ஒரு வணக்கமாகும்.

■அல்லாஹ் சமீபமாக இருக்கிறான்.

■பிரார்த்தனைக்கு விடையளிக்கிறான்.

■அல்லாஹ்விடமே பிரார்த்திக்க (துஆ) செய்ய வேண்டும்

எனவே மேற்கண்ட குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் நமது தேவைகளை அல்லாஹ்விடமே பிரார்த்திக்க வேண்டும். ஷாகுல் ஹமீது அவுலியாவிடமோ அல்லது வேறு எந்த வலியிடமோ, நபியிடமோ பிரார்த்தித்தால் அது ஷிர்க் எனப்படும் மன்னிக்கபடாத மாபெரும் பாவமாகும்.


நேர்ச்சை செய்வதும் ஒரு வணக்கமேயாகும்: -

   நேர்ச்சை செய்வது ஒரு வணக்கம் என்பதற்கு பின்வரும் குர்ஆன் வசனங்கள் சான்றுகளாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: -

இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர். (அல் குர்ஆன் 2:270)

அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும். (அல் குர்ஆன் 76:7)

எனவே மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் நேர்ச்சை என்பதுவும் ஒரு வணக்கமே. அதை அல்லஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டும். அதைவிடுத்து ஷாகுல் ஹமீது அவுலியா மற்றும் இன்னும் பிற அவுலியாவுக்குச் செய்தோமேயானால் அது ஷிர்க் என்னும் இணை வைத்தலைச் சேரும்.

எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் அல்லாஹ் மட்டுமே: -

ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் அல்லாஹ் மட்டுமே: -

திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக அஸ் ஸமீவுன் என கூறுகிறான். இதற்கு ஒருவர் எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும், எத்தகையை சூழலில் இருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் வல்லமை, ஆற்றல் பெற்றவன் என பொருள்படும். மேலும் ஒரே நேரத்தில் பல கோடி நபர்கள் அழைத்தாலும் அவர்களின் அழைப்பையும் கேட்கக் கூடியவன் எனவும் பொருள்படும். இந்த பண்பு, ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடமும் இல்லை.

மேலும் திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக பஷீரன் என கூறுகிறான். இதற்கு அல்லாஹ் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியவன் என பொருள்படும். அதாவது ஒருவர் எங்கிருந்துக் கொண்டும் மேலும் எத்தகைய சூழலில் இருந்துக் கொண்டும் அழைத்தாலும் அவரைப் பார்க்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அதுமட்டுமல்லாமல் அவன் அவனுடைய படைப்பினங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடிய ஆற்றல் உள்ளவனாகவும் இருக்கிறான். இந்த ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் இல்லை.

யாராவது ஒருவர் தாம் சிங்கப்பூரிலிருந்து ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ்வை அழைக்கும் போதும், அதே நேரத்தில் உலகில் வேறு எந்த இடத்திலிருந்துக் கொண்டும் அழைக்கக் கூடிய பல்லாயிரக்கணக்காணோர்களைப் பார்த்து அவர்களின் அழைப்பைச் செவிமெடுக்கிறார் என நம்புவது அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய அஸ் ஸமீவுன் மற்றும் பஷீரன் என்ற நாமங்களை, பண்புகளை இறைவனல்லாத ஷாகுல் ஹமீது அவுலியாக்கு இணை கற்பிப்பது போலாகும்.

அவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கேட்கும் தன்மையையும் (அஸ் ஸமீவுன்) மற்றும் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்கக்கூடியவன் (பஷீரன்) என்ற தன்மையையும் அல்லாஹ்வுக்கு மட்டுமல்லாமல் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் இருப்பதாக நம்மி அல்லாஹ்வின் அந்தப் பண்புகளில், ஆற்றல்களில் இணை வைத்தவராவார்.


அல்லாஹ் கூறுகிறான்: -

“வரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்) அடைய விரும்பினால், “அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.” (அல் குர்ஆன் 4:134)

இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே: -


அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: -

மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் – நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன் (அல்குர்ஆன் 67:13)

நம் மனதில் உள்ள நம்முடைய தேவைகளை அல்லது எண்ணங்களை நாம் வெளியே சொன்னால் தவிர மற்றவர்களால் அறிந்து கொள்ள இயலாது என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ் மட்டும் நாம் மனதிற்குள் நினைப்பதையும் வெளிப்படையாகப் பேசுவதையும் அறிகிறான்.


அல்லாஹ் கூறுகிறான்: -

அன்றியும், அல்லாஹ் நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் அறிகிறான். (அல் குர்ஆன் 16:19)

வெளிப்படையாக (நீங்கள் பேசும்) பேச்சையும் அவன் நிச்சயமாக அறிகிறான்; நீங்கள் (இதயத்தில்) மறைத்து வைப்பதையும் அவன் (நிச்சயமாக) அறிகிறான் (அல் குர்ஆன் 21:110)


மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில்: -

■உள்ளங்களில் மறைத்து வைப்பதை அறிபவனும்,

■இதயங்களிலுள்ள இரகசியத்தை அறிபவனும்,

■மனிதர்களின் மனதில் உள்ள தேவைகளை அறிபவனும்

அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பது உறுதியாகிறது. ஆனால் ஒருவர் இந்தப் பண்புகள், ஆற்றல்கள் ஷாகுல் ஹமீது அவுலியாவிற்கும் உண்டு அதனால் அவர் சிங்ப்பூரிலிந்து கேட்கும் அவரது தேவைகளை அல்லது அவருடைய மனதில் எண்ணியிருக்கும் நாட்டங்களை ஷாகுல் ஹமீது அவுலியா நிறைவேற்றித் தருகிறார் என நம்பிக்கை கொண்டு அதன்படி செயல்படுவாராயின் நிச்சயமாக அவர் அல்லாஹ், தனக்கு மட்டுமே இருக்கக் கூடியதாக கூறும் அந்தப் பண்புகளை, ஆற்றல்களை அவர் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் பங்கிடுவதன் மூலம் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவராக கருதப்படுவார்.

இவ்வாறு அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான்: -

நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான் – இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். (அல் குர்ஆன் 29:42)

மேலும், இதய இரகசியங்களை அறிந்தவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று பல வசனங்கள் கூறுகின்றன. இது பற்றிய விளக்கத்தை ‘இதய இரகசியத்தை அறிபவன் அல்லாஹ்வே’ என்ற தலைப்பில் பார்க்கவும்.


பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே: -

நாம் எங்கிருந்துக் கொண்டு துஆ (பிரார்த்தனை) கேட்டாலும், எத்தகைய சூழ்நிலைகளில் இருந்துக் கொண்டு அழைத்தாலும் நம்முடைய அழைப்பச் செவியேற்று அதற்கு பதிலளிப்பவன், அந்த தேவைகளை நிறைவேற்றுபவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.


அல்லாஹ் கூறுகிறான்: -

உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.’ (அல் குர்ஆன் 40:60)

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக. (அல் குர்ஆன் 2:186)

‘உங்கள் இணை (தெய்வங்)களை அழையுங்கள்’ என்று (அவர்களுக்குச்) சொல்லப்படும். அவர்களை இவர்கள் அழைப்பார்கள்; ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள்; மேலும், அவர்கள் வேதனையைக் காண்பார்கள். அவர்கள் நேர்வழியில் சென்றிருந்தால் (இந்நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்). (அல் குர்ஆன் 28:64)

நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள். (அல் குர்ஆன் 35:14)

       உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது; (இவன் அள்ளாது) அது வாயை அடைந்து விடாது – இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை. (அல் குர்ஆன் 13:14)

         ‘எனக்கு இணையானவர்கள் என எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள்’ என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்; இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம்.’ (அல் குர்ஆன் 18:52)

    எனவே எனதருமை சகோதர சகோதரிகளே மேற்காணும் வசனங்களின் மூலம் நாம் பெறும் படிப்பினைகளப் பற்றி சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


இந்த வசனங்களின் மூலம் நாம் பெறும் தெளிவுகள் யாவை எனில்: -

■பிரார்த்திப்பவரின் பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே

■அல்லாஹ்விடம் மாத்திரமே பிரார்த்தனை செய்யவேண்டும்

■அல்லாஹ்வைத்தவிர மற்றவர்களிடம் பிரார்த்தனை செய்தால் அவர்களால் அந்தப் பிரார்த்தனையைச் செவியேற்க இயலாது.

■கியாம நாள் வரை அவர்களை அழைத்தாலும் அவர்களால் பதிலளிக்க இயலாது

■கியாம நானில் அல்லாஹ்வுக்கு இணை வைத்ததை அவர்கள் நிராகரித்து விடுவார்கள்.

■அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்பவருக்குத்தான் அல்லாஹ் நேர்வழி காட்டுவான்.

எனவே மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் ஒருவர் பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே என நம்பிக்கை கொண்டு அவனிடமே பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆனால் ஷாகுல் ஹமீது அவுலியாவும் நம்முடைய பிரார்த்தனையைச் செவிமெடுத்து நமக்கு பதிலளித்து நம்முடைய தேவைகளைப் பெற்றுத்தருகிறார் என நம்பிக்கைக் கொண்டால் அது ஷிர்க் என்னும் இணை வைத்தலைத் தவிர வேறொன்றுமில்லை.



இன்ஷா அல்லாஹ் வளரும்…

SUVANATHENDRAL

தொழாதவனின் நோன்பு, தர்மம் போன்ற நல்லறங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா?

எழுதியவர்:மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)



பதில்: -

ஐங்காலத் தொழுகையை நிறைவேற்றுவது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் இருபாலர் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் கூறுகிறான்: -



“நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103)



மேலும் இத்தொழுகையானது இஸ்லாத்தின் தூண்களில் இரண்டாம் இடத்தைப் பெருகின்றது. எக்காரணத்தாலும் தொழுகையை விடுவதற்கு இஸ்லாத்தில் இடமே கிடையாது. எந்தளவுக்கென்றால் யுத்தக்களத்திலும் கூட தொழுகையை நிறைவேற்றியாக வேண்டும். ஒழுச் செய்வதற்குத் தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் தயம்மும் செய்யுமாறு ஏவப்பட்டுள்ளது. இது போன்ற இன்னும் பல காரணங்களால் பெரும்பாலான உலமாக்கள், ‘வேண்டுமென்றே தொழுகையை விடுவது ஒருவனை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றி விடும்’ எனக் கூறியுள்ளனர். எனவே தவ்பாச் செய்து மீளுவது கடமையாகும்.



அல்லாஹ் கூறுகிறான்: -



“அவர்கள் தவ்பாச் செய்து (திருந்தி) தொழுகையை நிலைநாட்டி, ஜக்காத்தும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள்” (அல்-குர்ஆன் 9:5)



மேலும் அல்லாஹ் கூறுகையில்: -



“அவர்கள் தவ்பாச் செய்து (திருந்தி), தொழுகையை நிலைநாட்டி, ஜக்காத்தும் கொடுத்தால் அவர்கள், மார்க்கத்தில் உங்கள் சகோதரர்களே” (அல்-குர்ஆன் 9:11)



எனவே இஸ்லாமிய சகோதரத்துவம் தொழுகை மூலமாக நிலைப்பது போன்று, தொழுகையை விடுவதன் காரணமாக அது இல்லாமல் போவதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.



அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -



“நிராகரிப்புக்கும் இஸ்லாத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தொழுகையே. எவன் அதனை விடுகின்றானோ நிராகரித்தவனாகின்றான்” (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)



அபு தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்: -”எவனிடம் தொழுகை இல்லையோ அவனிடம் ஈமான் இல்லை”



ஒருவன் நோன்பு நோற்கிறான், ஆனால் தொழுவதில்லை. இவன் நிலை என்ன?



தொழாதவனுடைய நோன்பு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஏனென்றால் அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டான் என்று ஒருவன் தீர்ப்பளித்தால் அவன் குற்றவாளியா? என இப்னு உதைமீன் (ரஹ்) அவர்களிடம் வினவப்பட்ட போது, பின்வருமாறு பதிலளித்தார்கள்: -



நோன்பு நோற்றாலும் தொழாததன் காரணத்தால் அத்தீர்ப்பு சரியானதே. ஏனென்றால் தொழுகையானது இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றாகும். தொழுகையில்லாமல் இஸ்லாம் நிலைபெறாது. எனவே தொழுகையை விட்டவன் நிராகரிப்பவனாகின்றான். மேலும் நிராகரிப்பாளனின் நோன்போ, தர்மமோ ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.



அல்லாஹ் கூறுகிறான்: -



“அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை” (அல் குர்ஆன் 9:54)



மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தொழுகையற்ற நோன்பானது எவ்விதப் பயனும் அளிப்பதில்லை என்பது தெளிவாகின்றது. எனவே முதலாவதாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டுவிட்டு அடுத்ததாக தொழுகையை நிலைநாட்ட வேண்டும்.

சுவனப் பயணத்திற்கோர் சுவையான அழைப்பு

எழுதியவர்:மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)


மூலம்: ஈத் அல் அனஸி, தமிழாக்கம்: அபூ அரீஜ், அல்-கப்ஜி.



நீ அல்லாஹ்விற்கு அருகிலிருப்பதை விரும்புகிறாயா?





“அடியான் தனது இரட்சகனுக்கு மிகவும் அருகாமையில் இருக்கும் நிலை அவன் சுஜுதில் இருக்கும் போது தான். எனவே பிரார்த்தனைகளை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.

ஒரு ஹஜ் செய்த நன்மையைப் பெற விரும்புகிறாயா?



“ரமளான் மாதத்தில் உம்ரா செய்வது ஒரு ஹஜ் அல்லது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்குச் சமமானதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.



சுவனத்தில் உனக்கொரு வீட்டைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறாயா?



“எவனொருவன் அல்லாஹ்வுக்காக பள்ளியொன்றை கட்டுகிறானோ, அவனுக்கு அதே போலொரு வீட்டை அல்லாஹ் கட்டுகிறான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.



அல்லாஹ்வினது திருப்பொருத்தத்தைப் பெற நாடுகிறாயா?



“அடியான் உணவருந்தி விட்டு அதற்காக அல்லாஹ்வை புகழ்வதை அல்லது பானத்தை அருந்திவிட்டு அதற்காக அல்லாஹ்வைப் புகழ்வதையொட்டி அல்லாஹ் (அந்த அடியானைப்) பொருந்திக் கொள்கிறான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.



உன் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதை விரும்புகிறாயா?



“அதானுக்கும் இகாமத்திற்குமிடையில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூதாவுத்.



ஒரு வருடம் முழுவதும் நோன்பு நோற்ற கூலி எழுதப்படுவதை விரும்புகிறாயா?



“ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் நோற்பது அந்த வருடம் முழுவதும் நோற்பதற்குச் சமமானதாகும்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.



மலைகளை போன்ற நன்மைகள் கிடைப்பதை விரும்புகிறாயா?



“மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு ‘கிராத்’ அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு ‘கிராத்’ அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு ‘கிராத்’ என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.



நபிகளார் (ஸல்) அவர்களுடன் சுவனத்தில் இருப்பதற்கு விரும்புகிறாயா?



“நானும் அனாதைக்கு அபயமளிப்பவரும் சுவனத்தில் இவ்வாறு இருப்போம் என நபிகள் (ஸல்) அவர்கள் சுட்டு விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்” ஆதாரம்: புகாரி.



அல்லாஹ்வின் பாதையில் போராடிய கூலியைப் பெற விரும்புகிறாயா?



“கணவனை இழந்தவள், ஏழை போன்றோர்களிடத்தில் கவணம் செலுத்துபவர் புனிதப் போரில் போரிட்டவர் போலாவார்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.



ரசூல் (ஸல்) அவர்கள் உனக்கு சுவனத்தைப் பொறுப்பேற்பதை விரும்புகிறாயா?



“எவர் தன் நாவையும், மருமஸ்தானத்தையும் பாதுகாப்பதாக எனக்கு வாக்களிக்கின்றாரோ அவருக்கு நான் சுவனத்தைப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.



மரணத்திற்குப் பின்னும் உன் நல்லறங்கள் தொடர்வதை விரும்புகிறாயா?



“ஒருவர் மரணித்தால் அவரது மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. (அவை): – நிலையான தர்மம், அல்லது பிரயோசனமுள்ள கல்வி, அல்லது சாலிஹான குழந்தையின் பிரார்த்தனை” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.



சுவனத்துப் புதையல் ஒன்றைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறாயா?



“லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” என்று கூறிக் கொள்ளுமாறு நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.



இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மையைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறாயா?



“எவர் ‘இஷாத்’ தொழுகையை ஜமாத்தோடு தொழுகிறாரோ அவர் பாதி இரவை நின்று வணங்கியவர் போலாவார். எவர் சுப்ஹ் தொழுகையையும் ஜமாத்தோடு தொழுகிறாரோ அவர் முழு இரவும் தொழுததைப் போன்றதாகும்.” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.



அல்குர்ஆனில் முன்றில் ஒரு பகுதியை சில வினாடிகளில் ஓதுவதை ஆசைப்படுகிறாயா?



“குல் ஹுவல்லாஹ் அஹது…” அல்குர்ஆனில் முன்றில் ஒரு பகுதிக்குச் சமமானதாகும் என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.



உனது நன்மையின் தராசு கனமாக இருப்பதை விரும்புகிறாயா?



“அளவற்ற அருளாளனுக்கு மிகவும் விருப்பமான, நாவுக்கு இலகுவான, தராசுக்கு கணமான இரண்டு வசனங்கள்: “சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம்”. ஆதாரம்: புகாரி.



உன் இரணத்தில் விஸ்தீரணம் ஏற்படுவதையும், ஆயுள் நீடிக்கப்படுவதையும் விரும்புகிறாயா?



“எவரது இரணத்தில் விஸ்தீரணம் ஏற்படுவதை அல்லது தனது ஆயுள் நீடிக்கப்படுவதை விரும்புகிறாரோ அவர் இனபந்துக்களுடன் (உறவினருடன்) சேர்ந்து வாழட்டும்” ஆதாரம்: புகாரி



உன்னை அல்லாஹ் சந்திக்க விரும்புவதை ஆசைப்படுகிறாயா?



“எவர் அல்லாஹ்வை சந்திப்பதை விரும்புகிறாரோ அவரை அல்லாஹ் சந்திக்க விரும்புகிறான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்: புகாரி.



அல்லாஹ்வுடைய பாதுகாப்பை விரும்புகிறாயா?



“எவர் சுபுஹுத் தொழுகையை நிறைவேற்றுகிறாரோ அவர் அல்லாஹ்வினது பாதுகாப்பிற்குள் வந்து விடுகிறார்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி.



உனது பாவங்கள் அதிகமாக இருந்தும் அவைகள் மன்னிக்கப்படுவதை விரும்புகிறாயா?



“எவர் ‘சுபுஹானல்லாஹி வபிஹம்திஹி’ என ஒரு நாளைக்கு நூறு தடவை கூறுகின்றாரோ, அவருடைய பாவங்கள் கடல் நுரையைப் போலிருந்தாலும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன”. ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.



நரக நெருப்பை விட்டும் ஏழு வருட தூரம் நீ தூரமாக்கப்படுவதை விரும்புகிறாயா?



“எவர் அல்லாஹ்வுடைய பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முகத்தை நரக நெருப்பை விட்டும் ஏழு வருட தூரம் அல்லாஹ் தூரமாக்கி விடுகின்றான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி.



உன் மீது அல்லாஹ்தஆலா சலவாத்து சொல்வதை விரும்புகின்றாயா?



“எவர் என் மீது ஒரு முறை ஸலவாத்து சொல்கின்றாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத்துச் சொல்கின்றான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.



உன்னை அல்லாஹ் மேன்மைப்படுத்துவதை நீ விரும்புகின்றாயா?



“எவர் அல்லாஹ்வுக்கென்று தன்னைத் தாழ்த்திக் கொள்கின்றாரோ அவரை அல்லாஹ் மேன்மைப்படுத்துகிறான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.

இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவம்!

எழுதியவர்:மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி


இஸ்லாம் ஏனைய மதங்களைப் போலல்லாமல் சகோதரத்துவத்தை அதிகமாக வலியுறுத்துகின்றது. அதற்கென இருக்கின்ற வழிகாட்டல்களை தெளிவாக விளக்குகின்றது. சகோதரத்துவத்திதை இல்லாமல் ஆக்குகின்ற அல்லது அதற்கு களங்கம் ஏற்படுத்துகின்ற அனைத்து வழிகளையும் முற்றாக தடை செய்திருப்பதோடு அதை மீறி செயல்படுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் உண்டு எனவும் எச்சரிக்கைச் செய்கின்றது. இதன் மூலம் பலம் வாய்ந்த ஒரு சமுதாயத்தையும், ஈமானிய சமுதாயத்தையும் ஒற்றுமையை வளர்ப்பதுவுமே இதன் குறிக்கோளாகும். இது இஸ்லாத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும்.



இஸ்லாமிய வரலாற்றைப் படிக்கின்ற போது இதன் உண்மை நிலையை அறிந்துக் கொள்ளலாம். நபி (ஸ்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்படுவதற்கு முன்னிருந்த அக்கால அரேபியர்கள் எந்த முறையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்? புனிதமான அந்நகரில் அவர்களுக்கு மத்தியில் கோத்திர வெறி தலைவிரித்தாடியது! கோத்திரங்களுக்கிடையில் வருடக்கணக்காக சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார்கள்! வாழையடி வாழையாக அதனைத் தொடர்ந்து செய்துகொண்டே வந்தார்கள். அடிமை, எஜமான் என்ற பாகுபாடு அதிகமாக காணப்பட்டன! எஜமானர்களோ தங்களது அடிமைகளை தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடத்தினார்கள். நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம், மொழிக்கு மொழி, கோத்திரத்திற்கு கோத்திரம், இனத்திற்கு இனம், நிறத்திற்கு நிறம் என்றெல்லாம் பலவிதமான பாகுபாடுகளுடன் வாழ்ந்து வந்தார்கள்.



நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்ட பிறகு இஸ்லாம் இவை அனைத்திற்குமே முற்றுப்புள்ளி வைத்தது. அல்-குர்ஆன் அருளப்பட்டது! ஈமானிய ஒளி பிரகாசித்தது! நபி (ஸல்) அவர்கள் இதன் மூலம் அச்சமுதாய மக்களின் உள்ளத்துக்கு தெளிவுபடுத்தினார்கள். அவர்களுக்கு சிறந்த அறிவைக்கொண்டு நேர்வழியை அடைவதற்குரிய வழிமுறையைக் காட்டினார்கள். இதனால் அவர்களது உள்ளங்கள் அமைதி பெற்றன. இறைவிசுவாசம் என்ற ஒரே கோட்பாட்டின் கீழ் அவர்கள் ஒன்றினைந்தார்கள். அனைத்து வேற்றுமைகளில் இருந்தும் நீங்கிக்கொண்டார்கள். கோத்திர வெறி மற்றும் உலக ஆசைகள் இவைபோன்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பகரமாக ஈமானிய சகோதரத்துவத்தை உருவாக்கினார்கள். அதே கோட்பாட்டின் கீழ் அனைவருமே ஒன்றினைந்து செயற்பட்டார்கள்! இதனால் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வல்லரசை ஏற்படுத்துகின்ற அளிவிற்கு மிகப்பெரும் வெற்றியையும் பெற்றார்கள்!



இஸ்லாத்தில் சகோதரத்துவத்தின் முக்கியத்துவம்!



(1) இஸ்லாம் சகோதரத்துவத்தை இறைவிசுவாசத்துடன் இணைத்துக் கூறுகின்றது. இரண்டு சகோதரர்களுக்கு மத்தியில் பிணக்கு ஏற்பட்டால் அதனைத் தீர்த்து வைக்கவும் கட்டளையிடுகின்றது (அல்-குர்ஆன் 49:10).



இந்த வசனம் நமக்கு எதனைப் போதிக்கின்றது? இறைவிசுவாசிகள் அனைவருமே சகோதரர்கள் என்பதன் மூலம் சகோதரத்துவத்தைத் தூண்டக்கூடியதாகவும், சகோதரத்திற்கு களங்கம் ஏற்படுகின்ற விசயங்கள் நடந்துவிட்டாலும் அதைத் தீர்த்து வைக்கவும் ஏவுவதன் மூலம் சகோதரத்துவம் மென்மேலும் உருவாகும் என்பதனை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது. நபித்தோழர்களது வாழ்க்கையும் இவ்வாறே அமைந்திருந்தது. நபி (ஸல்) அவர்களும் தனது தோழர்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் வருகின்ற போது அவ்வப்போது அவற்றை தீர்த்துவைத்து ஒற்றுமையாக்கியிருக்கின்றார்கள். இதனால் தான் மூன்று நாட்களுக்கு மேல் ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனுடன் பேசாமல் இருப்பதைக் கூட இஸ்லாம் தடை செய்திருக்கின்றது.



(2) ஒரு முஃமின் இன்னொரு முஃமினை நேசிப்பதற்கும் இஸ்லாம் அறிவுரை கூறுகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:



‘ஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’ (ஆதாரம் : முஸ்லிம்).



நமது முஸ்லிம் சமூகத்தில் தற்போது நிலவுகின்ற ஒற்றுமை இன்மைக்கும் அதனால் நமது சமூகம் பல பிரிவுகளாகப் பிரிந்து சின்னாபின்னமாகப் போயிருப்பதற்கும் தற்காலத்தில் மிக முக்கிய காரணமாக அமைவது இந்த நபிமொழியில் அடங்கியிருக்கின்ற மிகக்கடுமையான எச்சரிக்கையை அலட்சியம் செய்து அதற்கு மாற்றமாக நடப்பதுவேயாகும் என்றால் அது மிகையாகாது!



ஒருவன் தனது வாழ்வில் முன்னேறிச் செல்கின்றபோது இன்னொருவன் அதனைப் பார்த்துப் பொறாமைக் கொள்ளக் கூடியவனாகவும் அவனது முன்னேற்றத்தை தடைச் செய்வதற்கும் முயற்சிக்கின்றான். இதனால், மேற்கண்ட நபிமொழியில் கூறப்பட்ட, இஸ்லாம் கூறும் சகோதரத்துவத்தை பின்பற்றாததால், தான் விரும்பக்கூடிய, ‘வாழ்க்கையில் முன்னேறுவதை’ இன்னொரு சகோதரனும் அடைவதை விரும்பாததால், அவன் துன்பப்படுவதைக் கண்டு இவன் இன்பமடைவதால் அங்கு பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன. இதனால் தான் ஒரு பிரச்சனையின் ஆரம்பத்தையே இஸ்லாம் தடுத்து சகோதரத்துவத்தை விரும்பக்கூடிய விசயங்களை ஊக்குவிக்கின்றது.



(3) எப்படிப்பட்ட விசயங்களுக்காக சகோதரத்துவ நட்பு வைக்க வேண்டும் என்பதையும் இஸ்லாம் கற்றுத்தருகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:



‘அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்காகவே ஒருவனை வெறுத்து நடங்கள்’ (ஆதாரம் : அஹ்மத்)



அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொள்வதென்றால், நேசிப்பதென்றால் என்ன?



ஒன்றாகப் பழகும் சந்தர்ப்பத்தில் ஒருவருக்கொருவர் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடக்கக்கூடியவாறு நல்லுபதேசங்களைச் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு நட்பாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஒருவர் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்கின்றபோது வணக்கவழிபாடுகளைப் புறக்கணிக்கின்ற போது மற்றவர் அச்சகோதரனுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவன் அவற்றை அலட்சியப்படுத்துகின்றபோது, நல்லுபதேசங்களைக் கேட்காதபோது, அவற்றை அவர் ஏற்று செயல்படுத்தும் வரை அவரை அல்லாஹ்வுக்காக வெறுத்து நடக்கவேண்டும்.



(4) இஸ்லாம் இனம், நாடு, நிறம், சாதி, மொழி ஆகியவற்றுக்கிடையே எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை! மாறாக ஏக இறைவனை ஏற்றுக்கொண்ட இவர்கள் அனைவரையும் ‘முஸ்லிம்கள்’ என்றே பார்க்கின்றது. இவற்றை நபி (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்களது வாழ்க்கை வரலாற்றின் மூலம் அறியலாம். பிலால் (ரலி) அவர்களைப் பொருத்தவரையில் ஒரு மிகப்பெரும் குரைசிக்குலத் தலைவனுக்கு அடிமையாக வாழ்ந்தவர். மேலும் அவர் கருமை நிறமுடையவராக இருப்பதோடு எத்தியோப்பியாவைச் சேர்ந்தவரும் ஆவார். நபி (ஸல்) அவர்களோ அல்லது நபித்தோழர்களோ அவரை ஒருபோதும் பிரித்துப்பார்க்கவில்லை! மாறாக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சகோதரர்கள் என்றகையில் அக்கால நபித்தோழர்களுக்கு மத்தியில் ஒற்றுமை இருந்தது. இதனால் இவர் அபூபக்கர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்டார்கள். உலகிலேயே இரண்டாவது தரத்தில் இருக்கின்ற அல்-மஸ்ஜிதுல் நபவியில் முஅத்தினாக இருந்தார். மக்கா வெற்றியின் போது பெரும் பெரும் நபித்தோழர்கள் மக்காவிலே இருக்கின்ற சந்தர்ப்பத்திலே யாரை நபி (ஸல்) அவர்கள் கஃபாவுக்கு அழைத்துச் செல்வார் என்று எpதிர்ப்பார்த்திருந்தபோது ஆரம்பத்திலே அடிமையாகவும், நிறத்திலே கருமையாகவும் இருந்த பிலால் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் கஃபாவுக்குள்ளே அழைத்துச் சென்றார்கள். இவைகள் அனைத்துமே, இஸ்லாம் சகோதரத்துவத்திற்கு பாகுபாடு காட்டுவதில்லை என்பதையே உணர்த்துகின்றது. இதே போன்று ஏராளமான நிகழ்வுகள் நடந்திருப்பதையும் இஸ்லாமிய வரலாற்றைப் படிக்கின்ற போது விளங்கிக்கொள்ளலாம்.



மக்களுக்கு மத்தியில் இருக்கும் குலங்களும் கோத்திரங்களும் அவர்களுக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் அறிந்துக்கொள்வதற்காகவே என்று இஸ்லாம் அறிவுரை கூறுகின்றது. அவர்களுக்கு மத்தியில் எவ்வித உயர்வு தாழ்வு கிடையாது என்றும் இஸ்லாம் கூறுகின்றது.



“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்” (அல்-குர்ஆன் 49:13)



இந்த அல்-குர்ஆன் வசனம், அல்லாஹ் மனிதனை ஒரே ஆண் ஒரே பெண்ணிலிருந்து படைத்தான் என்பதன் மூலம் அனைத்துப் பாகுபாடுகளையும் ஆரம்பத்திலேயே தடுக்கின்றது. வசனத்தின் இறுதியில் அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவர் யார் என்பதற்கு ஒரு அளவு கோலையும் தருகின்றது. அவர்களே அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவர்! அவர்கள் தான் இறையச்சமுடையவர்கள். தற்போது உலகில் பெரும் பிரச்சனையாக கருப்பர், வெள்ளையர் பிரச்சனை இருப்பதை தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் அறியலாம். அதே போன்று சாதிப்பிரச்சனைகள் இந்தியாவில் பல இயங்களிலும் இது ஊடுருவி இருப்பதை பார்க்கலாம். இவைகள் அனைத்துக்கும் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.



‘அரபிக்கும் அஜமிக்கும், அஜமிக்கும் அரபிக்கும் மத்தியிலும் கருப்பனுக்கும் வெள்ளையனுக்கும் வெள்ளையனுக்கும் கருப்பனுக்கும் மத்தியிலும் வித்தியாசங்கள் கிடையாது. அனைவருமே ஆதமில் இருந்து வந்தவர்கள்; ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவர்’ (ஆதாரம் : அஹ்மத்)



இவ்வாறாக இன, நிற, இட, தேச, மொழி என்றெல்லாம் பாகுபாடு காட்டாமல் இஸ்லாம் சகோதரத்துவத்தை முக்கியப்படுத்தி வலியுறுத்துவதை அறியலாம்.

அல்-குர்ஆனும், கிறிஸ்தவர்களும்!

(அருஞ்சொற்பொருள் – இந்தப் பக்கத்தின் இறுதியில் பார்க்கவும்)



கிறிஸ்தவர்களே! நமக்கும் உங்களுக்குமிடையே இசைவான ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்!



“(நபியே! அவர்களிடம்) ‘வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்’ எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: ‘நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!’ என்று நீங்கள் கூறிவிடுங்கள்” (அல்-குர்ஆன் 3:64)

தந்தையின்றி பிறந்த இயேசுவின் பிறப்பு ஓர் அற்புதம்!



மலக்குகள் கூறினார்கள்; ‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்; ‘மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.’ (அச்சமயம் மர்யம்) கூறினார்: ‘என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும் போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?’ (அதற்கு) அவன் கூறினான்: ‘அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் ‘ஆகுக’ எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.’ இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான். (அல்-குர்ஆன் 3:45-48)



தீர்க்கதரிசி ஆபிரஹாம் யூதரா அல்லது கிறிஸ்தவரா?



வேதத்தையுடையோரே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதரா, கிறிஸ்தவரா என்று வீணாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்?



அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லையே; (இதைக்கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா?



உங்களுக்குச் சிறிது ஞானம் இருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள்; (அப்படியிருக்க) உங்களுக்குச் சிறிதுகூட ஞானம் இல்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.



இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை; ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்; அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை



நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார்; மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்.



வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது; எனினும், (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை



வேதத்தையுடையவர்களே! நீங்கள் தெரிந்து கொண்டே அல்லாஹ்வின் வசனங்களை ஏன் நிராகரிக்கின்றீர்கள்?



வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்?” (அல்-குர்ஆன் 65-71)



இயேசு நாதர் (அலை) அவர்கள் கொல்லப்படவும் இல்லை, சிலுவையில் அறையப்படவும் இல்லை; அல்லாஹ் அவரை உயர்த்திக் கொண்டான்: -



(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.



‘ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்’ என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)! (அல்-குர்ஆன் 3:54-55)



மேலும் அவர்கள் தம் நிராகரிப்பி(ல் எல்லை மீறிவிட்டத)னாலும் மர்யம் மீது பெரியதொரு அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வுடைய தூதரும் மர்யமின் மகனுமான ஈஸா – மஸீஹை நாங்கள் தாம் கொன்றோம். என அவர்கள் கூறியதாலும் (அவர்களை நாம் சபித்தோம்). – உண்மையில் அவர்கள் அவரைக் கொலை செய்யவுமில்லை, அவரைச் சிலுவையில் அறையவுமில்லை. மாறாக, அவருடைய நிலைமை அவர்களுக்குச் சந்தேகத்துக்குரியதாக ஆக்கப்பட்டு விட்டது. மேலும், எவர்கள் ஈஸா விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அவர்கள் இதுபற்றி சந்தேகத்திலே இருக்கின்றார்கள். யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர இதுபற்றி வேறு எந்த அறிவும் அவர்களிடத்தில் இல்லை. நிச்சயமாக அவர்கள் அவரை – மஸீஹை – கொலை செய்யவேயில்லை. மாறாக அல்லாஹ் அவரைத் தன்பக்கம் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வலிமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாய் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 4:157-158)



இறைவன் மூவரில் ஒருவராக (Trinity) இருக்கிறார் என்று கூறாதீர்கள்! நிச்சயமாக இறைவனின் “குன்” என்ற வார்த்தையின் மூலம் பிறந்த இயேசு நாதர் ஒரு தீர்க்கதரிசியே அன்றி வேறில்லை!



“வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்;



இன்னும் (‘குன்’ ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் – (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் – ஏனெனில்,



வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்” (அல்-குர்ஆன் 4:171)



ஆதாமை இறைவன் தந்தையின்றி படைத்ததைப் போலவே இயேசு நாதரையும் தந்தையின்றி படைத்தான்!



“அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் ‘குன்’ (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்” (அல்-குர்ஆன் 3:59)



மற்ற மனிதர்களைப் போல உணவு உண்பவராகவும், மனிதர்களுக்கு உரிய மற்ற இயல்புகளை உடையவராகவும் இருந்த இயேசு நாதரை எவ்வாறு இறைவன் என்று கூறுகிறீர்கள்? இயேசு நாதர் இறைவனின் தூதரே அன்றி வேறில்லை!



நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்; ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை; அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும். இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி தவ்பா செய்து, அவனிடம் மன்னிப்புத் தேடமாட்டார்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கிறான்.



மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை, இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர்; இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர்; அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக!



‘அல்லாஹ்வையன்றி, உங்களுக்கு எந்த தீங்கையோ, நன்மையோ செய்ய அதிகாரம் இல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?’ என்று (நபியே!) நீர் கேளும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாவற்றையம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.



‘வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள்; (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டதாரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன், தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்’ என்றும் (நபியே!) நீர் கூறுவீராக!”(அல்-குர்ஆன் 5:73-77)



கிறிஸ்தவர்களே! இறைவனின் இறுதி தூதரைப் பின்பற்றுங்கள்! அவருக்கு அவர் வழங்கிய இறுதி வேதத்தையும் பின்பற்றுங்கள்! இயேசுதான் இறைவன் என்று கூறாதீர்கள்!



அன்றியும் எவர்கள் தங்களை, ‘நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்’ என்று கூறிக்கொள்கிறார்களோ அவர்களிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம்; ஆனால் அவர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே, இறுதி நாள் வரை அவர்களிடையே பகைமையும், வெறுப்பும் நிலைக்கச் செய்தோம்; இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காட்டுவான்.



வேதமுடையவர்களே! மெய்யாகவே உஙகளிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார்; வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது. அல்லாஹ் இதைக் கொண்டு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக் கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர் வழிகளில் செலுத்துகிறான்; இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்; மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.



திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். ‘மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்’ என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்¢ இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 5:14-17)



இயேசு நாதர் போதித்ததும் ஒரே இறைவனை வணங்க வேண்டுமென்றுதான்!



நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்’ என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: ‘இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும்,

உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்’ என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை” (அல்-குர்ஆன் 5:72)



‘எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்.நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான்; ஆகவே அவனையே வணங்குங்கள் இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான வழியாகும்.’ (அல்-குர்ஆன் 3:50-51)



நியாயத் தீர்ப்பு நாளில் இறைவனுக்கும் இயேசு நாதருக்கும் (அலை) நடக்கவிருக்கும் உரையாடல்: -



‘இன்னும் ‘மர்யமுடைய மகன் ஈஸாவே ‘அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும் போது,



அவர் ‘நீ மிகவும் தூய்மையானவன் எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை அவ்வாறு நான் கூறியிருந்தால் நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய் என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய் உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன் நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன் என்று அவர் கூறுவார்’



{மேலும் ஈஸா (அலை) கூறுவார்},



‘நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி) ‘என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும் நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய் (என்றும் கூறுவார்.)’ (அல் குர்ஆன் 5:116-117)



கிறிஸ்தவர்களே! இயேசுவை இறைவனின் மகன் என்று கூறாதீர்கள்! உங்கள் பாதியார்களுக்கும், சன்னியாசிகளுக்குமம் கட்டுப்பட்டு அவர்களின் கூற்றை வழிபடாதீர்கள்! இறுதி தூதரையும், இறுதி வேதத்தையும் பின்பற்றுங்கள்!



யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் எள்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?



அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை – அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.



தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.



அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் – முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)



ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும்,சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்;



இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!



நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் – (இன்னும்) ‘இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்’ (என்று கூறப்படும்)” (அல் குர்ஆன் 9:30-35)



இயேசு நாதரும், வானவர்களும் (Angels) ஏக இறைவனையே வழிபடுவதை குறைவாகக் கருதமாட்டார்கள்! கிறிஸ்தவர்களே! நீங்களும் ஏக இறைவனின் மீது நம்பிக்கைக் கொண்டு அவனையே வழிபடுவீர்களாக!



(ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய்) வழிபடுதலைக் குறைவாக எண்ணி, கர்வமுங் கொள்கிறார்களோ, அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பான்”



ஆனால் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழுமையாக (அல்லாஹ்) கொடுப்பான்; இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான்; எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணி கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான்; அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணமாட்டார்கள்” (அல் குர்ஆன் 4:172-173)



இஸ்லாம் மார்க்கத்தைத் தவிர வேறு எந்த மார்க்கமும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது!



“இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்” (அல் குர்ஆன் 3:85)



அருஞ்சொற்பொருள்: -



அல்லாஹ் = GOD,

மஸீஹ்=ஈஸா = Jesus (pbuh),

ஆதம் = Adam (ஆதாம்),

குன் = God’s WORD,

வேதத்தையுடையோர் = Jews and Christians,

இப்ராஹீம் = Abraham, இன்ஜீல் = The Holy Scripture revealed to Jesus (Christian called it as Bible),

தவ்ராத் = Tora, Holy Scripture which was revealed to Moses,

முஷ்ரிக்=இணை வைப்பவர் = Who associate anything or anybody with God for worshipping,

நபி = தூதர் = Prophet,

மர்யம் = Mary (pbuh),

மலக்குகள் = Angels,

ஈமான் = Believe,

நிராகரிப்பவர் = காஃபிர் = Disbeliever,

ஈமான் கொண்டவர் = Beilever, முஃமின் = Believer.








சுவனத்தென்றல்

கிறிஸ்தவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் – திரித்துவம் (Trinity)!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....




நாம் சாதாரண கிறிஸ்தவர் ஒருவரைப் பார்த்து கடவுள் எத்தனைப் பேர் என்றால், ‘ஒருவர்’ தான் என்று உடனே பதில் வரும். சில விபரமறிந்த கிறிஸ்தவர்களிடம் கேட்டால், ‘கடவுள் ஒருவர் தான்! ஆனால் மூவரில் இருந்து செயல்படுகிறார்’ (Triune God) என்று கூறுவார்கள்.

கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்ற ‘திரித்துவம்’ (Concept of Trinity) என்ற மூன்று கடவுள் கொள்கை பைபிளில் கூறப்படாத கடவுள் கொள்கையாகும். இது பைபிளின் பல்வேறு வசனங்களுக்கு முற்றிலும் முரண்பாடுடையதாக இருக்கிறது. மேலும் ஒரே ஒரு கடவுள் என்று கூறிக்கொண்டே கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்பது பல கிறிஸ்தவர்களுக்கு விசித்திரனமானதாகவும் அறிவுக்கு எட்டாததாகவும், புரியாத புதிராகவும் இருக்கிறது மேலும் பல கிறிஸ்தவர்கள் தங்களின் கொள்கையையே கைவிடுவதற்கும் காரணமாக இருக்கிறது.



குழப்பங்களின் மொத்த வடிவம் தான் கிறிஸ்தவர்களின் இந்த ‘திரித்துவக் கடவுள் கொள்கை’ என்றால் அது மிகையாகாது. ஏனெனில் எவ்வித லாஜிக்கும் இல்லாத இந்த திரித்துவக் கோட்பாடு பல கிறிஸ்தவர்களின் மனதிலே சிந்தனைகளாக, கேள்விகளாக உழன்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் திரித்துவம் குறித்து கேள்விகள் கேட்காதே! இத்தகைய கேள்விகள் சாத்தானின் புறத்திலிருந்து வருகிறது. கேள்வி கேட்டால் நீ பெரும்பாவம் செய்த பாவியாகி விடுவாய்! என்ற பயமுறுத்தலின் காரணமாக பல கிறிஸ்தவர்கள் தங்களின் மனதிற்குள் இயற்கையாக எழக்கூடிய அறிவுப்பூர்வமான இத்தகைய சிந்தனைக் கேள்விகளை மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டு நமக்கேன் வம்பு என்று உண்மையை அறிந்து கொள்ளாமல் இருந்துவிடுகின்றனர்.



கடவுள் என்பவர்,



- ஆரம்பம் மற்றும் முடிவு அற்றவராக இருக்க வேண்டும்.



- எவரிடத்திலும் எத்தகைய தேவையுமற்றவராகவும், ஆனால் அவரால் சிருஷ்டிக்கப்பட்டவர்ககோ அவரது தேவையுடைவர்களாக இருக்கின்றனர்.



- கடவுளுக்கு ஓய்வோ அல்லது உறக்கமோ தேவையில்லை, ஏனென்றால் ஒரு கணநேரம் கூட தவறாது இந்த பிரபஞ்சத்தையும் அதில் உள்ளவர்களையும் பாதுகாத்து வருபவன்.



- மனிதனுக்கு இருக்கின்ற பலஹீனங்களான உணவு உண்ணுதல், இயற்கைத் தேவைகள் (மலம், ஜலம் கழித்தல்), உறக்கம், பிறப்பு, மரணம், நோய், பிறரை சார்ந்திருத்தல் போன்ற எத்தகைய பலஹீனங்களும் கடவுளுக்கு இல்லை,



- அவர் தனித்தவர், அவருடைய ஆட்சி, அதிகாரத்திற்கு யாருடைய உதவியும் தேவையுமில்லை,



- அவர் விரும்பியதை செய்கிறார், அவரைக் கேள்வி கேட்போர் யாருமில்லை,



- கடவுளின் கட்டுப்பாட்டை விட்டும் ஒரு நொடிப்பொழுதும் இந்த பிரபஞ்சத்தின் ஆட்சி அதிகாரம் அகன்று விடுவதில்லை.



- மனிதர்களின் பாவங்களை மன்னிப்பதற்கு கடவுளை வேறு எதுவும் நிர்பந்திப்பந்திப்பதில்லை. அவர் நாடியவர்களின் பாவங்களை மன்னிக்கிறார், நாடியவர்களை தண்டிக்கிறார்.



இந்த கட்டுரை யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல! மாறாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் சிந்தித்து தெளிவு பெற வேண்டுமென்பதே எமது அவா!



எனதருமை கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே! கடவுளின் இத்தகைய குணாதிசயங்களை மனதில் இருத்திக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடைகாண முன்வாருங்கள்! சிந்தித்து தெளிவு பெறுங்கள்! தவறுகள் இருந்து எங்களுக்கு ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினால் நன்றியறிதலுடன் திருத்திக் கொள்வோம்.



திரித்துவம் (Trinity) குறித்த சில சிந்தனைக் கேள்விகள்: -



Q 1. பெரும்பாலான கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் தேவன், முழுமையான மனிதபிறவியெடுத்து முழுமனிதனாக (இயேசுவாக)வும் இருந்தார், அதே நேரத்தில் முழு முதற் தேவனாகவும் இருந்தார் என்பது நம்பிக்கையாகும்.



மனிதன் என்பவன் முடிவு உள்ளவன். தேவன் என்பவர் முடிவு அற்றவர். இந்நிலையில் எப்படி முடிவு உள்ளவரும் முடிவு அற்றவரும் ஒன்றாக முடியும்?



Q 2. தேவன் என்பவர் நிரந்தரமற்றவைகள் மற்றும் எத்தகைய தேவைகளிலிருந்தும் விலகியிருப்பவராகவும் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். முழுமனிதன் என்பது தேவனின் தன்மை இல்லாதவன் ஆவான்.



இந்நிலையில் இப்பூவுலகில் வாழும் போது தன்னுடைய தாய் மற்றும் பிறருடையதேவையுடையவராக வாழ்ந்த முழுமனிதரான இயேசு கிறிஸ்து எப்படி தேவனின் தன்மையுடையவரா ஆக முடியும்?



Q 3. விபரமுள்ள கிறிஸ்தவர்கள் சிலர் ‘திரித்துவத்திற்கு’ உவமைகள் கூற முற்படுவர். சிலர் ‘முட்டையை உதாரணம் கூறுவர், முட்டையில் ஓடு, வெள்ளை மற்றும் மஞ்சள் கரு என்ற மூன்றும் சேர்ந்து ஒரே முட்டைக்குள் இருப்பது போன்று ஒரு கடவுள் மூவரில் இருக்கிறார் என்பர்.



ஒரே முட்டையில் சில நேரங்களில் இரண்டு மஞ்சள் கரு கூட இருக்குமே அதனால் சில நேரங்களில் தேவன் நால்வரில் கூட இருப்பாரோ?



Q 4. இன்னும் சிலர், ஒரே ஆப்பிள் பழத்தில் அதன் தோல், கனி மற்றும் விதை என்று மூன்றும் ஒன்றில் இருப்பது போல் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரும் ஒருவராக இருக்கிறார்கள் என்பர்.



ஆப்பிள் பழத்தின் உள்ளே ஒன்றுக்கு மேற்பட்ட பல விதைகள் இருக்கின்றனவே அது போல் தேவன் பலரில் ஏன் இருக்கக் கூடாது?



Q 5. இன்னும் சிலர் ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் இருப்பது போல் ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறுவர்.



சதுரம் மற்றும் செவ்வகத்திற்கு நான்கு மூலைகள் இருக்கின்றனவே! அது போல் ஏன் ஒரு கடவுள் நான்கு பேரில் இருக்கக் கூடாது?



Q 6. இன்னும் சிலர் சற்று அறிவுப்பூர்வமாக விளக்கமளிப்பதாகக் நினைத்துக்கொண்டு, ஒருவர் சிலருக்கு தந்தையாகவும், இன்னும் சிலருக்கு சகோதரராகவும், அதே நேரத்தில் கல்லூரியில் முதல்வராகவும் இருப்பதில்லையா? அதே போல் ஒரே ஒரு கடவுள் மூவராக இருந்து செயல்படுகிறார் என்பர்.



இந்த மூவரில் தந்தையாகவும், சகோதரராகவும் மற்றும் கல்லூரியில் முதல்வராகவும் இருக்கக் கூடிய ஒருவர் மரணித்தால் தந்தை, சகோதரர் மற்றும் முதல்வர் ஆகிய மூவரும் தான் மரணமடைந்ததாகும்!. அது போல் இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டபோது பிதா மற்றும் பரிசுத்த ஆவியும் கொல்லப்பட்டனரா?



Q 7. இன்னும் சிலர், திரித்துவத்திற்கு அறிவியல் மூலமாக விளக்கம் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு, நீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் இருப்பதைப் போல் ஒரு கடவுள் மூவரில் இருக்கிறார் என்பர்.



நீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் இருந்தாலும் H2O என்ற அதன் மூலப்பொருள் (components) என்றுமே மாறாமல் எப்போதும் H2O ஆகவே இருக்கிறது! ஆனால் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவி மூவரும் வெவ்வேறு மூலப்பொருட்களால் ஆனவரும் வெவ்வேறு தன்னை உடையவர்களும் ஆயிற்றே! முழு மனிதராகிய இயேசு கிறிஸ்து சதை மற்றும் எலும்புகளால் ஆனவர். ஆனால் மற்றவர்கள் ஆவியானவர்களாயிற்றே (made of sprit)? ஆவியானவர்களுக்கு கை, கால்கள் இருக்காதே! (பார்க்கவும் லூக்கா 24:36-40)



லூக்கா, 24 வது அதிகாரம், வசனங்கள் 36-40:

இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்(தார்).



தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிற்கு உண்ண உணவும், உடுக்க உடையும் தேவைப்பட்டது. இயற்கை உபாதைகளை வெளியேற்ற வேண்டிய அவசியமேற்பட்டது. அத்தகைய அவசியங்கள் ஆவியானவர்களுக்கு தேவையில்லையே?



Q 8. (தேவ) குமாரன் என்பது தெய்வத் தன்மையை விட அந்தஸ்தில் குறைவானது. தேவன் என்பவர் யாருடைய மகனாக இருக்கவும், இருந்திருக்கவும் முடியாது. இந்நிலையில் இயேசு கிறிஸ்து அவர்கள் எப்படி ஒரே நேரத்தில் “மகன்” தன்மை உடையவராகவும் “தெய்வீகத்” தன்மை உடையவராகவும் இருக்கமுடியும் ?



Q 9. “என்னை கண்டவன் பிதாவைக் கண்டான்” (யோவான் 14:9) என்ற பைபிளின் வசனத்தைக் கிறிஸ்தவர்கள் குறிப்பிட்டு இந்த வசனத்தின் மூலம், “தாம் கடவுள்” என்று இயேசு கிறிஸ்து அவர்கள் கூறியதாக கூறுவார்கள்.



ஆனால் பைபிளின் அதே யோவான் (5:37) என்ற வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து,



“என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை” என்று கூறவில்லையா?



Q 10. இயேசு கிறிஸ்து “தேவகுமாரர்” என்றும் “மேசியா” என்றும் “இரட்சிப்பவர் அல்லது இரட்சகன்” (Saviour) என்று ம் அழைக்கப்படுவதால் அவரை கிறிஸ்தவர்கள் கடவுள் என்கின்றனர். அமைதியை ஏற்படுத்துபவர்களை “தேவகுமாரர்கள்” என்று இயேசு கிறிஸ்து அவர்கள் குறிப்பிட்டதாக பைபிளில் காணமுடிகிறது. தேவனின் விருப்பங்களையும் திட்டங்களையும் பின்பற்றுகின்ற ஒருவனை யூதர்களின் வழக்குப்படி “தெய்வ மகன்” அல்லது “தேவகுமாரன்” என்று கூறப்படுவதுண்டு. பார்க்கவும் ஆதியாகமம் 6:2,4, யாத்திராகமம் 4:22, சங்கீதம் 2:7 மற்றும் ரோமர் 8:14.



தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். (ஆதியாகமம் 6:2)



அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்ற போது, இவர்களும் பூர்வத்தில் பேர் பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள். (ஆதியாகமம் 6:4)



அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன். (யாத்திராகமம் 4:22)



தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்; (சங்கீதம் 2:7)



மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். (ரோமர் 8:14)



ஹிப்ரு மொழியில் “மேசியா” என்பதற்கு தேவனின் அருள் பெற்றவர் என்று கூறுவதுண்டு. “இரட்சகன்” (savior) என்ற வார்த்தை இயேசுவிற்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பயன் படுத்தப்பட்டிருப்பதை பைபிளில் காண்கிறோம்.



“கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு ரட்சகனைக் கொடுத்ததினால், அவர்கள் சீரியருடைய கையின்கீழிருந்து நீங்கலானார்கள்; ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் முன்போல் தங்கள் கூடாரங்களிலே குடியிருந்தார்கள்” (II இராஜாக்கள் 13:5)



ஆகையால் “தேவகுமாரர்” (Son of God) அல்லது “இரட்சிப்பவர் அல்லது இரட்சகன்” (savior) போன்ற பெயர்கள் இயேசு கிறிஸ்துவிற்கு மட்டுமின்றி இன்னும் பலருக்கு பைபிளில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இயேசு கிறிஸ்து தான் “தேவன்” அல்லது அவர் மட்டும் தான் “தேவனின் உண்மையான குமாரர்” என்பதற்கு இந்த பெயர்கள் அல்லது வார்த்தைகளைத் தவிர்த்து வேறு என்ன ஆதாரம் இருக்கிறது?



Q 11. நானும் பிதாவும் “ஒன்றாயிருக்கிறோம்” (யோவான் 10:30) என்ற வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து அவர்கள் தாமும் தேவனும் ஒன்று என்று கூறியதாக கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதே யோவான் அதிகாரம் 17,வசனம் 21-23 ல் இயேசு கிறிஸ்து அவர்கள் தம்மையும் தம் சீடர்களையும் மற்றும் தேவனையும் பற்றி குறிப்பிடுகையில் ஐந்து இடங்களில் “ஒன்றாயிருக்கிறது” பற்றிக் கூறுகிறார்கள். இந்நிலையில் “ஒன்றாயிருக்கிறது” என்று முன்னர் கூறிய வார்த்தைக்கு (யோவான் 10:30) ஒரு அர்த்ததையும் யோவான் 17:21-23ல் ஐந்து இடங்களில் கூறப்பட்டிருக்கின்ற “ஒன்றாயிருக்கிறது” என்ற வார்த்தைக்கு வேறு அர்தத்தையும் கொடுப்பது ஏன்?



Q 12. தேவன் என்பவர் மூவரில் ஒருவராகவும், ஒருவரில் மூவராகவும் ஓரே நேரத்தில் (at a time) இருக்கிறாரா? அல்லது ஒரு நேரத்தில் ஒருவராக (one at a time) மட்டும் தான் இருக்கிறாரா?



Q 13. தேவன் என்பவர் ஒருவராகவும் மற்றும் மூவராகவும் ஓரே நேரத்தில் (at a time) இருந்தால் அந்த மூவருமே முழுமையான தேவனாக (கடவுளாக) இருக்கமுடியாது. இந்நிலையில் இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்திருந்த நேரத்தில் அவர் முழுமையான கடவுளாக இருந்திருக்க முடியாது அல்லது பரலோகத்தில் பிதாவாக முழுமையான கடவுளாக இருந்திருக்க முடியாது .



இந்நிலையில், இயேசு கிறிஸ்து அடிக்கடி குறிப்பிட்ட “அவருடைய தேவன் நம்முடைய தேவன்” மற்றும் “அவருடைய கடவுள் நம்முடைய கடவுள்” என்பது ஒன்றுக்கொன்று முரண்பாடுகளாகத் தோன்றவில்லையா?



மேலும் இது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டிருந்த சமயத்திலும் உயிர்த்தெழுந்த நேரத்திலும் முழுமையான தேவனாக இருக்கவில்லை என்று ஆகாதா?



Q 14. தேவன் என்பவர் ஒரே நேரத்தில் (at a time) ஒருவராகவும், மூவராகவும் இருந்தால், இயேசு கிறிஸ்து பூமியில் தாயின் கருவறையில் இருந்த போதும், தனக்குத் தானே எதுவும் செய்து கொள்ள முடியாமல் தன் தாயின் உதவியை எதிர் பார்த்திருந்த பச்சிளம் குழந்தையாக இருந்த போதும், வளர்ந்து வாலிபராகி பூமியில் இருந்த போதும் பரலோகத்தில் தேவனாக இருந்து இந்த பிரபஞ்சத்தை ஆட்சி செய்து அதில் உள்ள கோடானு கோடி ஜீவராசிகளுக்கு உணவளித்துக் கொண்டிருந்தவர் யார்?



Q 15. தேவன் ஒருவராகவும் மூவராகவும் ஒரே நேரத்தில் (at a time) இருந்தால், இயேசு கிறிஸ்து யூதர்களால் சிறை பிடிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்ற போதும், சிலுவையில் அறையப் பட்டு கொல்லப்பட்டதிலிருந்து உயிர்த்தெலுதல் வரையிலுமான இடைப்பட்ட அந்த மூன்று இரவு மூன்று பகலின் போதும் பரலோகத்தில் தேவனாக இருந்து உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தவர் யார்?



அந்த நேரத்தில் பிதாவாகிய தேவன் இந்த பிரபஞ்சத்தை இரட்சித்துக் கொண்டிருந்தார் என்று கூறினால் உங்களுடைய திரித்துவம் தோற்றுவிடுகிறது. ஏனென்றால் பிதா வேறு, தேவ குமாரன் வேறு என்றாகி நீங்கள் பல தெய்வ வணக்கமுடையவராகிவிடுகிறீர்கள்.



இல்லை அப்போதும் தனக்குத் தானே உதவி செய்து கொள்ள இயலாமல் தன் தாயாரின் உதவியையும், மற்றவர்களின் உதவியையும் எதிர்பார்த்த நிலையிலிருந்த இயேசு கிறிஸ்து தான் அல்லது மரணித்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட அந்த இயேசு கிறிஸ்து தான் இந்த பிரபஞ்சத்தையும் இரட்சித்துக்கொண்டிருந்தார் என்று நீங்கள் கூறுவீர்களா?



மேலும் இந்த திரித்துவக் கொள்கை பரலோகத்தில் இருக்கும் பிதாவே தம்மை அனுப்பியதாக இயேசு கிறிஸ்து கூறுகின்ற பல வசனங்களுக்கு முரண்பாடாக இல்லையா?



Q 16. கிறிஸ்தவர்களின் கூற்றுப்படி: -

பிதாவும் (Father) கடவுள்

தேவகுமாரனாகிய இயேசுவும் (Son) கடவுள்

பரிசுத்த ஆவிவும் (Holy Ghost) கடவுள்

ஆனால்,



பிதா என்பவர் தேவகுமாரன் இல்லை

தேவகுமாரன் என்பவர் பரிசுத்த ஆவி இல்லை

பரிசுத்த ஆவி என்பது பிதா இல்லை.



எளிமையான கணக்குப்படி,



G என்பது தேவனையும் (God)

F என்பது பிதாவையும் (Father)

S என்பது தேவகுமாரனையும் (Son)

H என்பது பரிசுத்த ஆவியையும் (Holy Ghost) குறிக்கிறது என வைத்துக் கொள்வோம்.



இதன் படி,



F=G, S=G, மற்றும் H=G என்றிருந்தால்,



அதாவது



பிதா என்பவர் தேவன்! (F=G)

தேவகுமாரன் என்பவர் தேவன்! (S=G)

பரிசுத்த ஆவி என்பது தேவன்! (H=G)



என்றிருந்தால், F=S=H என்று ஆகிவிடும்.



ஆனால் மேற்கூறிய இரண்டாவது கருத்துப்படி F ≠ S ≠ H



அதாவது



பிதா என்பவர் தேவகுமாரன் இல்லை! (F ≠ S)

தேவகுமாரன் என்பவர் பரிசுத்த ஆவி இல்லை! (S ≠ H)

பரிசுத்த ஆவி என்பது பிதா இல்லை! (H ≠ F)



இது கிறிஸ்தவர்களின் திரித்துவத்தில் காணப்படுகின்ற மிகப் பெரிய முரண்பாடு அல்லவா?



Q 17. இயேசு கிறிஸ்து கடவுளாக இருந்திருந்தால் தன்னை good master என்றழைத்த நபரிடம் தன்னை God என்று அழைக்க வேண்டாம் என்றும் பரலோகத்தில் உள்ள தன்னுடைய தேவனைத் தவிர வேறுயாரும் God இல்லை என்று ஏன் கூறவேண்டும்?



Q 18. மாற்கு 2:29 ல் இயேசு கிறிஸ்து “நம்முடைய தேவன் ஒரே ஒரு தேவனே” என்று கூறியிருக்க கிறிஸ்தவர்கள் தேவன் மூவரில் ஒருவர், ஒருவரில் மூவர் என்று ஏன் கூறுகின்றனர்?



Q 19. ஒருவர் கிறிஸ்தவராக இருப்பதற்கு “திரித்துவம்” மிக முக்கியமானது என்றிருந்தால் ஏன் இயேசு கிறிஸ்து தம்முடைய வாழ்நாளில் இதை போதித்து வலியுறுத்திக் கூறவில்லை?

மேலும், திரித்துவம் என்றாலே என்ன என்று அறியாமலேயே இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் எப்படி கிறிஸ்தவர்களாக கருதப்பட்டார்கள் திரித்துவக் கோட்பாடு தான் கிறிஸ்தவத்தின் முதுகெலும்பு என்றிருந்தால் அதை இயேசு கிறிஸ்து பல்வேறு சந்தர்பங்களில் போதித்து அதை மிக மிக வலியுறுத்திக் கூறி மக்களுக்கு விளக்கியிருப்பார்களே!



Q 20. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் இயேசு கிறிஸ்து பிதாவிடத்திலே பிரார்த்தனை செய்தார்?



அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். (மத்தேயு 11:25)



தெய்வம் தெய்வத்திடமே பிரார்த்தனை செய்து கொண்டதா?



Q 21. இயேசு கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியும், பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் பிதா அறிந்திருக்கின்ற அனைத்தையும் இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவி அறிந்திருக்கவில்லை?



அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். (மாற்கு 13:32) மற்றும் (மத்தேயு 24:36)



Q 22. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் பிதாவுக்கு இருக்கும் ஆற்றல் போன்று இயேசு கிறிஸ்துவிற்கு இல்லை?



நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான் 5:30) மற்றும் யோவான் 6:38.



சிந்தித்து தெளிவு பெறுங்கள் சகோதர, சகோதரிகளே!

சுவனத்தென்றல்