Saturday, August 7, 2010

சுவனப் பயணத்திற்கோர் சுவையான அழைப்பு

எழுதியவர்:மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)


மூலம்: ஈத் அல் அனஸி, தமிழாக்கம்: அபூ அரீஜ், அல்-கப்ஜி.



நீ அல்லாஹ்விற்கு அருகிலிருப்பதை விரும்புகிறாயா?





“அடியான் தனது இரட்சகனுக்கு மிகவும் அருகாமையில் இருக்கும் நிலை அவன் சுஜுதில் இருக்கும் போது தான். எனவே பிரார்த்தனைகளை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.

ஒரு ஹஜ் செய்த நன்மையைப் பெற விரும்புகிறாயா?



“ரமளான் மாதத்தில் உம்ரா செய்வது ஒரு ஹஜ் அல்லது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்குச் சமமானதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.



சுவனத்தில் உனக்கொரு வீட்டைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறாயா?



“எவனொருவன் அல்லாஹ்வுக்காக பள்ளியொன்றை கட்டுகிறானோ, அவனுக்கு அதே போலொரு வீட்டை அல்லாஹ் கட்டுகிறான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.



அல்லாஹ்வினது திருப்பொருத்தத்தைப் பெற நாடுகிறாயா?



“அடியான் உணவருந்தி விட்டு அதற்காக அல்லாஹ்வை புகழ்வதை அல்லது பானத்தை அருந்திவிட்டு அதற்காக அல்லாஹ்வைப் புகழ்வதையொட்டி அல்லாஹ் (அந்த அடியானைப்) பொருந்திக் கொள்கிறான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.



உன் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதை விரும்புகிறாயா?



“அதானுக்கும் இகாமத்திற்குமிடையில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூதாவுத்.



ஒரு வருடம் முழுவதும் நோன்பு நோற்ற கூலி எழுதப்படுவதை விரும்புகிறாயா?



“ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் நோற்பது அந்த வருடம் முழுவதும் நோற்பதற்குச் சமமானதாகும்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.



மலைகளை போன்ற நன்மைகள் கிடைப்பதை விரும்புகிறாயா?



“மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு ‘கிராத்’ அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு ‘கிராத்’ அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு ‘கிராத்’ என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.



நபிகளார் (ஸல்) அவர்களுடன் சுவனத்தில் இருப்பதற்கு விரும்புகிறாயா?



“நானும் அனாதைக்கு அபயமளிப்பவரும் சுவனத்தில் இவ்வாறு இருப்போம் என நபிகள் (ஸல்) அவர்கள் சுட்டு விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்” ஆதாரம்: புகாரி.



அல்லாஹ்வின் பாதையில் போராடிய கூலியைப் பெற விரும்புகிறாயா?



“கணவனை இழந்தவள், ஏழை போன்றோர்களிடத்தில் கவணம் செலுத்துபவர் புனிதப் போரில் போரிட்டவர் போலாவார்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.



ரசூல் (ஸல்) அவர்கள் உனக்கு சுவனத்தைப் பொறுப்பேற்பதை விரும்புகிறாயா?



“எவர் தன் நாவையும், மருமஸ்தானத்தையும் பாதுகாப்பதாக எனக்கு வாக்களிக்கின்றாரோ அவருக்கு நான் சுவனத்தைப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.



மரணத்திற்குப் பின்னும் உன் நல்லறங்கள் தொடர்வதை விரும்புகிறாயா?



“ஒருவர் மரணித்தால் அவரது மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. (அவை): – நிலையான தர்மம், அல்லது பிரயோசனமுள்ள கல்வி, அல்லது சாலிஹான குழந்தையின் பிரார்த்தனை” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.



சுவனத்துப் புதையல் ஒன்றைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறாயா?



“லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” என்று கூறிக் கொள்ளுமாறு நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.



இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மையைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறாயா?



“எவர் ‘இஷாத்’ தொழுகையை ஜமாத்தோடு தொழுகிறாரோ அவர் பாதி இரவை நின்று வணங்கியவர் போலாவார். எவர் சுப்ஹ் தொழுகையையும் ஜமாத்தோடு தொழுகிறாரோ அவர் முழு இரவும் தொழுததைப் போன்றதாகும்.” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.



அல்குர்ஆனில் முன்றில் ஒரு பகுதியை சில வினாடிகளில் ஓதுவதை ஆசைப்படுகிறாயா?



“குல் ஹுவல்லாஹ் அஹது…” அல்குர்ஆனில் முன்றில் ஒரு பகுதிக்குச் சமமானதாகும் என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.



உனது நன்மையின் தராசு கனமாக இருப்பதை விரும்புகிறாயா?



“அளவற்ற அருளாளனுக்கு மிகவும் விருப்பமான, நாவுக்கு இலகுவான, தராசுக்கு கணமான இரண்டு வசனங்கள்: “சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம்”. ஆதாரம்: புகாரி.



உன் இரணத்தில் விஸ்தீரணம் ஏற்படுவதையும், ஆயுள் நீடிக்கப்படுவதையும் விரும்புகிறாயா?



“எவரது இரணத்தில் விஸ்தீரணம் ஏற்படுவதை அல்லது தனது ஆயுள் நீடிக்கப்படுவதை விரும்புகிறாரோ அவர் இனபந்துக்களுடன் (உறவினருடன்) சேர்ந்து வாழட்டும்” ஆதாரம்: புகாரி



உன்னை அல்லாஹ் சந்திக்க விரும்புவதை ஆசைப்படுகிறாயா?



“எவர் அல்லாஹ்வை சந்திப்பதை விரும்புகிறாரோ அவரை அல்லாஹ் சந்திக்க விரும்புகிறான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்: புகாரி.



அல்லாஹ்வுடைய பாதுகாப்பை விரும்புகிறாயா?



“எவர் சுபுஹுத் தொழுகையை நிறைவேற்றுகிறாரோ அவர் அல்லாஹ்வினது பாதுகாப்பிற்குள் வந்து விடுகிறார்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி.



உனது பாவங்கள் அதிகமாக இருந்தும் அவைகள் மன்னிக்கப்படுவதை விரும்புகிறாயா?



“எவர் ‘சுபுஹானல்லாஹி வபிஹம்திஹி’ என ஒரு நாளைக்கு நூறு தடவை கூறுகின்றாரோ, அவருடைய பாவங்கள் கடல் நுரையைப் போலிருந்தாலும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன”. ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.



நரக நெருப்பை விட்டும் ஏழு வருட தூரம் நீ தூரமாக்கப்படுவதை விரும்புகிறாயா?



“எவர் அல்லாஹ்வுடைய பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முகத்தை நரக நெருப்பை விட்டும் ஏழு வருட தூரம் அல்லாஹ் தூரமாக்கி விடுகின்றான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி.



உன் மீது அல்லாஹ்தஆலா சலவாத்து சொல்வதை விரும்புகின்றாயா?



“எவர் என் மீது ஒரு முறை ஸலவாத்து சொல்கின்றாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத்துச் சொல்கின்றான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.



உன்னை அல்லாஹ் மேன்மைப்படுத்துவதை நீ விரும்புகின்றாயா?



“எவர் அல்லாஹ்வுக்கென்று தன்னைத் தாழ்த்திக் கொள்கின்றாரோ அவரை அல்லாஹ் மேன்மைப்படுத்துகிறான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.

No comments:

Post a Comment